முந்தைய பதிவுகள்
அறிமுகம் - http://wordsbeyondborders.blogspot.com/2014/08/the-granta-book-of-american-short-story.html
பதாகை இதழில் வெளிவந்தது - http://padhaakai.com/2014/08/03/the-granta-book-of-the-american-short-story-richard-ford/
-------
I – தந்தைகளும் மகன்களும்
அறநெறிகளை போதிக்கும் நூல்களும் கதைகளும் பெற்றோர்களை தெய்வமாக எண்ண வேண்டும் என்று சொல்கின்றன. இந்நூல்களில் வரும் பிள்ளைகளும் அப்படித்தான் இருக்கிறார்கள் அல்லது இறுதியில் திருந்தி பெற்றோரை வழிபடுகிறார்கள். ஆனால் யதார்த்தம் வேறாக இருப்பதால், அதை பிரதிபலிக்கும் இலக்கியமும் வேறு வகையான பெற்றோர்- பிள்ளை உறவையே காட்டுகிறது. நம் பெற்றோரிடம் நமக்கும், நம்மிடம் பெற்றோருக்கும் பல மனக்கசப்புக்கள் அவரவருக்குரிய காரணங்களோடு இருக்கின்றன. அதனால் நேரில் சந்திப்பதோ, கடிதமெழுதுவதொ, தொலைபேசியில் பேசுவதோகூட அதிகம் நிகழாமல் இருக்கலாம்.
இப்படிப்பட்ட ‘செயலிழந்த குடும்பங்கள்’ (Dysfunctional families) பற்றிய நாவல்களில்கூட குடும்ப உறவுகள் நிகழ்காலத்தில் எவ்வளவு மோசமாக இருந்தாலும், நாவலின் பாத்திரங்களால் உறவின் பிணைப்பிலிருந்து முற்றிலும் விடுபட முடிவதில்லை. புனைவுகள் என்றில்லை, ஏன், மக்கோர்ட்டின் நினைவுக் குறிப்புக்களிலும், குடும்பத்தைத் தவிக்கவிட்ட தந்தைமீது அன்பு இல்லாமலிருந்தாலும், பல்லாண்டுகள் கழித்து அவரைப் பார்க்க ப்ரான்க் செல்கிறார். உணர்ச்சிகரமான சந்திப்பாக அது இல்லையென்றாலும், அந்தச் சந்திப்புக்கான தூண்டுதல் என்ன? ஒரேயடியாக விலகிச் செல்வது அதிக வலி ஏற்படுத்தும் என்றாலும், இப்படி முழு ஒட்டும் இல்லாமல் பிரிவும் இல்லாமல் தொடர்ந்து அவதிப்படுவதற்கு அதுவே மேல் என்று எண்ணுமளவிற்கு இருக்கும் இந்த உறவுகளை, ஈரமே இல்லாத பாழ்வெளி ஆக்காமல் பிணைத்திருப்பது எது?
ஜான் சீவரின் (John Cheever) (சிறிய) சிறுகதை, ‘Reunion’, பெற்றோர் விவாகரத்து பெற்ற மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் தந்தை- மகன் சந்திப்பை மூன்று நான்கு காட்சிகள் மூலம் மட்டுமே விவரிக்கிறது. தன் மகனை அழைத்துச் செல்லும் உணவகங்களில் எல்லாம் தந்தை அலட்டலாக நடந்து கொள்ள, அந்த இடத்தைவிட்டு விலகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார். இறுதியில் கதைசொல்லியான மகன், அவரைக் கடைசியாகப் பார்த்தது அப்போதுதான் என்று சொல்லி ரயிலேறுவதுடன் கதை முடிகிறது.
இந்த மிகச் சிறிய கதைக்குள் சீவர் பல கேள்விகளை எழுப்புகிறார். தந்தையின் இத்தகைய நடத்தைக்கான காரணம் தெரிவதில்லை, அவர் குடித்திருக்கிறாரா (அது அவர் வழக்கமா) , அல்லது மகனை வெகு நாட்கள் கழித்து பார்த்ததால் இப்படி ஆள் கண்ட சமுத்திரம் போல, அவனை ஈர்க்க வேண்டி இப்படி நடந்து கொண்டு இறுதியில் தன்னையே முட்டாளாக்கிக் கொள்கிறாரா? கதைசொல்லியான மகன்தான் இந்தச் சந்திப்புக்காக தந்தையை முதலில் தொடர்பு கொள்கிறான், அவனுக்கு தந்தையின் இத்தகைய நடவடிக்கை எப்படி இருந்திருக்கும். இருவருக்கும் இடையில் உள்ள உறவு எத்தகையது, மூன்று வருடம் கழிந்தும் தந்தையை காணத் தூண்டுவது எது?
அதுதான் தன் தந்தையை இறுதியாகப் பார்த்தது என்று அவன் சொன்னாலும், அந்த உறவு அப்படியே முற்றிலும் முறிந்துவிடுமா என்ன? இவர்களின் கடந்த காலம் பற்றி நமக்கு எதுவும் தெரியாதது போல, எதிர்காலமும் கேள்விக்குறியாகத்தான் உள்ளது. இது குறித்து சீவர் எதுவும் சொல்லவில்லை என்றாலும், இணக்கமற்ற தந்தை- மகன் உறவுகளில் ஏற்படக்கூடிய மாற்றங்களை வேறு எழுத்தாளரின் இன்னொரு சிறுகதையை வைத்து யூகிக்க முடியுமா?
இதே தொகுப்பிலுள்ள ஸி.ஸி பாக்கெரின் (Z Z Packer) ‘The Ant of the Self’ சிறுகதை, கல்லூரி படிக்கும் கதைசொல்லியான மகன், தன் தந்தையை சிறையிலிருந்து பெயிலில் விடுவிப்பதுடன் ஆரம்பிக்கிறது. தந்தை ‘Black Panther’ அமைப்பில் இருந்தவர், சவடால் பேர்வழி, குடிகாரர் எனத் தெரிய வருகிறது. இங்கும் தந்தை குடும்பத்திலிருந்து பிரிந்துதான் இருக்கிறார். கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் கழித்து எழுதப்பட்ட இந்தச் சிறுகதையை, முதல் கதைக்கான நீட்சியாகப் பார்க்கலாமா? தந்தை மகனை (தப்பும் தவறுமாகவே) கவனித்துக் கொண்டது போக, காலத்தின் போக்கில் மகன் தந்தையைக் கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளது. விஷயம் அது மட்டுமல்ல, ஏன் கதைசொல்லி இதைச் செய்ய வேண்டும்? நாம் அறிந்தவரை இந்தத் தந்தையும் குடும்பத்தின்மீது அதிக அக்கறை கொண்டவராக இல்லை, பிறகு ஏன், கல்லூரியில் தான் பங்குபெற வேண்டிய விவாதப் போட்டிக்குச் செல்லாமல், தந்தையுடன் அவர் காதலி வீடு, வாஷிங்டன் என அவரை அழைத்துச் செல்கிறார் கதைசொல்லி. பாசமா? அப்படியென்றால் மனதில் தேக்கி வைத்திருந்த கொந்தளிப்பு வெடித்து, இருவருக்கிடையில் கைகலப்பு ஏன் ஏற்படுகிறது, தந்தையின் மனதைக் காயப்படுத்தும் என்று தெரியும் விஷயத்தைக் கூறுவது ஏன்?
முதல் கதையின் தந்தை- மகன் உறவின் பரிணாம வளர்ச்சியாக இந்தக் கதையை ஒருபுறம் பார்த்தாலும், மகன் ஏன் இந்த உறவை இன்னும் சகித்துக் கொண்டிருக்கிறான், ஏன் இந்த உறவு முற்றிலும் முறியவில்லை, எது இவர்களை, அவர்களுக்கிடையில் உள்ள அத்தனை வருத்தங்கள், கோபதாபங்கள் அனைத்தையும் மீறி பிணைத்திருக்கிறது. ஏன் மூன்றாண்டுகள் கழித்தும், சீவரின் கதைசொல்லி தந்தையை பார்க்க விரும்புகிறார்? பாக்கெரின் கதை இப்படி முடிகிறது. கதைசொல்லி, ரயில் நிலையத்தில் தனியாக அமர்ந்திருக்க, ஒரு தந்தை மகனுடன் வருகிறார். பயணச் சீட்டு கொடுப்பவரிடம் படங்களில் வருவது போல் ஒலிபெருக்கியில் வண்டிப் புறப்பாடு பற்றிய அறிவிப்பை செய்வாரா என்றும், அப்படிச் செய்தால் தன் மகன் விரும்புவான் என்றும் கேட்டுக் கொள்கிறார். சற்று சலித்துக் கொள்ளும் பயணச் சீட்டுக் கொடுப்பவர், ஒலிபெருக்கியில் இந்த அறிவிப்பைச் செய்ய, மகன் குதூகலிக்கிறான். இதைப் பார்த்து கதைசொல்லிக்கு அழத்தோன்றுகிறது, அதை அவர் கட்டுப்படுத்திக் கொள்கிறார். கதை முடிகிறது.
ஒருவர் கோபத்தில் என்ன பேசினாலும், செய்தாலும் எந்த ஒரு உறவையும் முற்றிலும் முறித்துக் கொள்வது என்பது எளிதானதல்ல. மேலும் குழந்தைகளுக்கு தந்தையே முதல் நாயகன் அல்லவா? ஒலிபெருக்கி அறிவிப்பு போன்ற ஒரு சிறிய செயல்கூட, அந்த வயதில், சிறுவனுக்கு தன் தந்தை தனக்காகச் செய்த பெரிய சாகசமாகத்தான் தோன்றக்கூடும். எதிர்காலத்தில் அவனுக்கும் தன் தந்தையுடன் பிணக்கு ஏற்படும், அந்தச் செயலின் சாதாரணத் தன்மை புரியக்கூடும், ஆனால் இந்தச் சம்பவம் அவனுள் ஏற்படுத்திய கிளர்ச்சியை அவனால் மறந்துவிட முடியுமா. பாக்கெரின் கதைசொல்லியும் இத்தகைய ஒரு சம்பவத்தை நினைத்தே நெகிழ்ந்திருக்கக் கூடும், சீவரின் கதை சொல்லிக்கும் அத்தகைய நினைவுகள் இருந்திருக்கலாம், அவையே இருவரையும் தந்தையைப் பார்க்க விரும்ப /சகித்துக் கொள்ள வைத்திருக்கலாம் . ஒரு விதத்தில் இந்த இரண்டு தந்தைகளும் மகன்களும், வெவ்வேறு காலகட்டத்தில், உறவு நிலைகளில் நாம் பார்க்கும் ஒருவரேதான்.
II – இழப்பை எதிர்கொள்ளலும் எதிர்நோக்குதலும்
நமக்கு நெருக்கமானவர்களை இழப்பது அல்லது இழந்து விடுவோம் என்ற நிலையில் இருப்பது, துயரத்தை தருவதோடு அந்த இழப்பை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற கேள்வியையும் எழுப்புகிறது. இந்த எதிர்கொள்ளலே அந்த இழப்பிற்குப் பின் நம் வாழ்வு செல்லும் திசையை தீர்மானிக்கிறது. சிலர் முற்றிலும் நொறுங்கி விடுகிறார்கள், சிலர் அசட்டையாக எதிர்கொள்கிறார்கள், இன்னும் சிலர் கொஞ்ச காலத்திற்கு வருந்திப் பின் சமநிலைக்கு திரும்புகிறார்கள். இழப்பை எதிர்கொள்வதும் எதிர்நோக்குவதும் தனி நபர் சார்ந்தே உள்ளது. ‘The Granta Book of the American Short Story’ தொகுப்பில் இதைக் களனாகக் கொண்டுள்ள மூன்று கதைகளைப் பார்ப்போம்.
1985இல் கனடா- இந்தியா இடையே பயணித்த ஏர் இந்தியா விமானம் ‘பப்பார் கல்சா’ இயக்கத்தால் தகர்க்கப்பட்ட, கனடாவில் உள்ள இந்திய வம்சாவளியினர் அதிகம் பாதிக்கப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட, பாரதி முகர்ஜியின் (Bharati Mukherjee), ‘The Management of Grief’ சிறுகதையில், தங்கள் உறவினர்களை இழந்தவர்கள், சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்து சம்பவ இடத்திற்குச் செல்லும்போது (உடல்களைப் அடையாளம் காட்டவும் பெற்றுக்கொள்ளவும்), மனைவி மக்களை இழந்த ரங்கநாதன், நீச்சல் தெரிந்தவர்கள் இந்த வெடி விபத்திலிருந்து தப்பித்திருக்கக்கூடும் என்றும் “It’s a parent’s duty to hope…” என்றும் சொல்கிறார்.
ஒருகணத்தில் தலைகீழாக மாறிவிட்ட வாழ்க்கையை உடனடியாக எதிர்கொள்வது என்பது அனைவருக்கும் சாத்தியமல்ல. இழப்பு குறித்த உண்மையை ஒப்புக் கொள்வதைத் தவிர்க்க நம்பிக்கை ஒரு வழியாக உள்ளது. ஆனால் அதுவும் நிரந்தரமல்ல. நம்பிக்கை வைக்க வேண்டும் என்று சொன்ன ரங்கநாதனும், பிறகு நூறு மைல் தொலைவில் உள்ள இடத்தில் புதிய வேலையில் சேர்ந்து, ஒரு நாளில் இருநூறு மைல்கள் பயணிப்பதின் மூலம் மனதை திசைதிருப்ப முயன்று, அதுவும் பயனளிக்காமல் கனடாவை விட்டு வெளியேறி டெக்ஸாஸ் மாநிலத்திற்கு செல்கிறார். எவ்வளவு தூரம் அவர் விலகிச் சென்றாலும் தன் இழப்பை நேருக்கு நேராக எதிர்நோக்கும்வரை அவர் அலைச்சல் ஓயுமா?
முதல் முறையாக கனடாவிற்கு வந்த சில நாட்களிலேயே மகன்களை இந்தச் சம்பவத்தில் இழந்த முதிய சீக்கிய தம்பதியர், அரசு தரும் உதவித் தொகையை ஏற்காமல், வங்கியில் மகன்கள் பெயரில் உள்ள பணத்தை எடுக்க சம்மதிக்காமல் – இவற்றைச் செய்தால் மகன்கள் இறந்து விட்டார்கள் என ஒப்புக் கொள்வதாகிவிடும் என்பதால் – பிள்ளைகள் திரும்பி வருவார்கள் என்ற தங்கள் நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ள, மகன்களின் வீட்டிலேயே அடைந்து கிடக்கிறார்கள். தன் கணவனையும் மக்களையும் இழந்த கதைசொல்லி, இந்த சம்பவம் குறித்த அரசியல் ரீதியிலான விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கிறார், ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்துகிறார். குஸும் என்பவர் ஆசிரமத்தில் சேர்ந்து நம்பிக்கையில் அல்லாமல் ஆன்மீகத்தில் நிம்மதியைத் தேடிகிறார். அனைவரும் ஒவ்வொரு விதத்தில் தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தாலும், ஒட்ட வைக்கப்பட்ட அவர்களின் புதிய வாழ்க்கைக்கும், அவர்களின் முந்தைய வாழ்க்கைக்கும் இடையே உள்ள இடைவெளி எப்போதும் நிரப்பப்பட முடியாதது.
வெறும் இழப்பை எதிர்க்கொள்ளுதலாக மட்டுமில்லாமல், இந்தச் சம்பவம் ஏற்படுத்தும் பிற விளைவுகளைப் பற்றிய அவதானிப்புக்களும் இந்தக் கதையில் உள்ளன. மனைவியை இழந்த கணவர்களுக்கு மறுமணம் செய்விக்க ஏற்பாடுகள் செய்யப்படும் நிலையில், பெண்கள் குறித்து அத்தகைய சிந்தனைகள் எழுவதில்லை, அப்படியே எழுந்தாலும் மனைவியை இழந்தவர்களுக்கு துணையாக இருப்பவர்களாகவே அவர்கள் பார்க்கப்படுவார்களேயன்றி அவர்களின் தனி விருப்பங்கள் கேட்கப்படாது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சீக்கியர்கள், அவர்களின் தலைப்பாகையை பார்ப்பது தன்னை அதிர வைக்கிறது என்கிறார் கதைசொல்லி. ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த நம்பிக்கை இப்போது தகர்ந்து விட்டது போல் உள்ளது என்று அவர் சொல்வது, 9/11க்கு பிறகு இஸ்லாமியர்கள் என்று எண்ணி சீக்கியர்கள் தாக்கப்பட்டதை நினைவூட்டுவதோடு , இனம் சார்ந்த தேவையில்லாத தீவிர அச்சம் (paranoia) எழுவதற்கு எந்த ஒரு தனி சம்பவமுமே கூட காரணமாக இருக்குமென்பதை உணர்த்துகிறது.
இன்றைய நிலைமைக்கும் பொருந்தும் இந்தக் கதை எல்லையற்ற பெருவெளியில் தங்கள் இழப்பை தனிமையில் சுமந்தலையும் பாத்திரங்கள் பற்றிய உணர்வைத் தந்தால், ஜூம்பா லஹிரியின் (Jhumpa Lahiri) ‘A Temporary Matter’ சிறுகதை, குறுகிய இடத்தின் மூச்சுத்திணறலோடு (claustrophobia), இழப்பை எதிர்கொள்ளும் தம்பதியரைப் பற்றியது. ஷோபா- சுகுமார் தம்பதியரின் இல்லத்தில் அடுத்த சில நாட்களுக்கு இரவு 8 மணிக்கு மின்னிணைப்பு துண்டிக்கப்படும் என்ற அறிவிப்பால், மின்சாரம் இல்லாததால் இருவரும் ஒன்றாக உண்ண வேண்டிய, ஒரே அறையில் ஓரிரு மணிநேரமாவது ஒன்றாக இருக்க வேண்டிய சூழல் உருவாவதை சுகுமார் விரும்பவில்லை. தம்பதியருக்குள் அப்படி என்ன பிரச்சனை?
ஷோபா கர்ப்பமாக இருந்தபோது, வேலை விஷயமாக சுகுமார் வெளியூர் செல்ல ஷோபாவிற்கு கருக்கலைப்பு ஏற்பட்டபின் உண்டான பிளவு இன்னும் சேரவில்லை. ஷோபாவிற்கு எப்படியோ, சுகுமாருக்கு, தான் மனைவியை தனியாக விட்டுச் சென்றது குறித்த குற்ற உணர்வு உள்ளது. வீட்டின் தாளகதியே மாறி, அவசியமேற்பட்டால் ஒழிய ஒருவரை ஒருவர் ச்ந்தித்துக்கொள்வதைத் தவிர்க்க விரும்பி , இரு அந்நியர்கள் ஒரே வீட்டில் வாடகைக்கு இருப்பது போல் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள், இது அவர்களுக்கு தங்களுக்கிடையில் பேசப்படாமல் இருக்கும் விஷயத்தைப் இன்னும் தள்ளிப் போட உதவி தற்காலிக ஆசுவாசத்தை அளிக்கிறது.
இந்நிலையில் மின்னிணைப்பு துண்டிப்பு பற்றிய அறிவிப்பு. ஷோபா அந்த நேரத்தை ஒருவர் குறித்து இன்னொருவருக்கு இதுவரை தெரியாத ஏதாவது விஷயத்தை சொல்லி கழிக்கலாம் என்று சொல்ல அடுத்த சில நாட்கள் கழிகின்றன, இருவருக்குள் கொஞ்சம் இணக்கம் ஏற்படுகிறது. இந்த பரஸ்பர உண்மை பரிமாற்றங்களால் நிலைமை சீராகலாம் அல்லது மின்னிணைப்பு துண்டிப்பு நின்றவுடன் பழைய நிலைக்கே இருவரும் செல்லலாம் என்ற இரு வாசல்களே வாசகனுக்குத் இங்கு தோன்ற, வெகு இயல்பான, கண் முன் இருந்தும் நாம் கவனிக்காத இன்னொரு வாயிலை கதையின் இறுதியில் லஹிரி திறக்கிறார். துயரங்களைப் பகிர்ந்துகொள்ளும் ஆட்களையோ, சூழலயோவிட பகிரும் மனமே தேவைப்படுகிறது.
இந்த இரண்டு கதைகளிலும் பாத்திரங்கள் தங்கள் இழப்பை எதிர்கொள்வதைத் தவிர்த்தாலும், ஆழ்மனதில் அவர்களுக்கு உண்மை புரிகிறது. அந்த உண்மையை ஏற்றுக் கொள்வதற்கான போராட்டமே இந்தக் கதைகள் என்றால், தெளிவற்ற ஆனால் இழப்பைத் தரக்கூடிய எதிர்காலத்தை எதிர்கொள்வதைப் பற்றியது லோரி மோரின் (Lorrie Moore) ‘People Like That Are the Only People Here: Canonical Babbling in Peed Onk’ சிறுகதை.
கதைசொல்லியான எழுத்தாளரின் குழந்தைக்கு சிறுநீரகத்தில் கட்டி இருப்பது தெரிய வர, அதை அந்தத் தம்பதியர் எதிர்கொள்வதை மோர் சொல்கிறார். ஸ்கான் அறிக்கையைப் பார்த்து இது குறித்து மருத்துவர் சொன்னவுடன், கதைசொல்லி, தான் ஸ்கான் எந்திரம் அருகில் நின்றிருந்ததால் அதில் உள்ளது தன் சிறுநீரகமாக இருக்கக்கூடுமோ என்று கேட்கிறார். இது அசட்டுத்தனமான கேள்வியாகத் தோன்றினாலும் “It’s a parent’s duty to hope…” என்ற பாரதி முகர்ஜி கதையின் ரங்கநாதனின் கூற்றை நினைவில் கொண்டால், எந்த ஒரு ஊன்றுகோலையாவது பற்றிக்கொள்ள துடிக்கும் ஒரு தாயின் ஆர்வம் புரியும். நிஜத்தில் இத்தகைய வரவேற்கப்படக்கூடிய/ வரவேற்கப்பட வேண்டிய தவறுகள் நடப்பதில்லை என்பதால், கதைசொல்லியின் மகனுக்கு வந்திருக்கும் நோய் கடுமையானது என்பதால், மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான்.
கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருக்கும் இந்த இடம் வேறு ஒரு உலகம். இங்கு பெற்றோர்கள் இதற்கு முன்பு அவர்கள் சென்றிருந்த மருத்துவமனைகள் குறித்து ஒப்பிட்டு பேசுகிறார்கள், (ஒரு முறைக்கு மேல்) கோமாவில் ஆழ்ந்து மீண்ட மகன் குறித்த பேச்சுக்கள் சாதாரணம், மகனின் நோயால் குடும்பம் பிரிந்ததும் நடந்துள்ளது, மகனுக்காக தானும் மொட்டை அடித்துக் கொண்ட, வேலையை விட்டுவிட்ட தந்தையும் உள்ளார். நம் கதைசொல்லியும் அவர் கணவரும் அசட்டையாக பேசுவதைத் தங்கள் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர், அந்தக்குழந்தையின் பெற்றோருக்கு ஊக்கமூட்டுவதாக எண்ணிக் கொண்டு.
புற்று நோய் வகைகளிலேயே சற்று நல்லது என்று சொல்லக் கூடியதே தங்கள் மகனுக்கு வந்துள்ளது என, தன்னையறியாமல் அசந்தர்ப்பமாக மருத்துவர் கூற “We win..” என்று கதைசொல்லியும் அசந்தர்ப்பமாக சொல்கிறார். அவர் கணவர், 16 வயது வரை வளர்ந்து விபத்தில் இறப்பதற்கு இது மேல் என்று சொல்ல, கதைசொல்லி தான் விபத்தை தேர்வு செய்வதாகவும், நோய்க்கு பதில் 16 வயதில் விபத்து என்று ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்றும் பேசிக்கொள்கிறார்கள். இதற்கிடையில் இரண்டு குழந்தைகள் பெறுவதின் அவசியத்தை அறிவுறுத்தும் நண்பர்கள் (‘An heir and a spare’), கதைசொல்லி எழுதிய நாவலை சிலாகித்து அதில் அவர் கையொப்பத்தைக் கேட்கும் மருத்துவர் என இவர்களின் சூழலுக்கு பொருத்தமில்லாத சம்பவங்களும் நடக்கின்றன. சுற்றிலும் அவர்களைப் போலவே பாதிக்கப்பட்ட பலர் இருந்தாலும், அது கதைசொல்லிக்கு ஆசுவாசம் அளிப்பதில்லை,”I never want to see any of these people again” என்கிறார்.
துயரத்தை பகிர்ந்து கொள்ள மனமும், ஆட்களும் இருந்தாலும், ஒரு கட்டத்தில் அவரவர் சிலுவையை அவரவர் தான் சுமக்க வேண்டும் இல்லையா (ஒரு இந்தியப் பெண்மணி இந்தக் கதையில் வரும் சூழலை எதிர்கொள்ளும் விதத்தை இங்கு படிக்கலாம் ).
“Pulling through is what people do around here. There is a kind of bravery in.their lives that isn’t bravery at all. It is automatic, unflinching, a mix of man and machine, consuming and unquestionable obligation meeting illness move for move in a giant even-steven game of chess–an unending round of something that looks like shadowboxing, though between love and death, which is the shadow? “Everyone admires us for our courage,” says one man. “They have no idea what they’re talking about.”
என்று மோர் சொல்கிறார். இது இந்த கதைசொல்லிக்கோ, மற்ற இரண்டு கதைகளில் வரும் பாத்திரங்களுக்கோ மட்டுமல்ல, இழப்பை எதிர்கொண்டுள்ள நம் அனைவருக்கும் பொருந்தும். இழப்பிலிருந்து நாம் முழுமையாக மீள்வதே இல்லை. கண்ணில் படும்போதெலாம் நினைவிற்கு வரும் உடலில் உள்ள வடுவாக, நம் வாழ்க்கையின் அங்கமாக மாற்றி அதனுடன் வாழ்வை நகர்த்துவதையே நாம் செய்கிறோம்.
No comments:
Post a Comment