Tuesday, June 9, 2015

சபத், ஸ்வீட் – பிலிப் ராத் நாவல்களின் இரு ஆண் பாத்திரங்கள்

பதாகை இதழில் வெளிவந்தது - (http://padhaakai.com/2015/05/31/sabad-and-swede/)
--------

பிலிப் ராத் நாவல்களில் நாம் சந்திக்கும் ஆண்கள் பொதுவாக எப்படிப்பட்டவர்கள்? பெண்பித்து கொண்டு அலையும் முதியவர்கள் (Mickey Sabbath/ மிகி சபத்), வெடித்துச் சிதறும் மனநிலைக்கு மிக அருகில் இருப்பவர்கள் (Ira Ringold), தங்கள் குழந்தைகளின் (அந்தக் குழந்தைகள் பெரியவர்கள் ஆன பின்பும்) நலம் குறித்த பதட்டத்திலேயே எப்போதும் இருப்பவர்கள், தெளிவற்ற அறம் சார்ந்த கொள்கை உடையவர்கள் (morally ambivalent), சுயநலக்காரர்கள், மற்றவர்களின் உணர்வுகளை மிதித்துத் தள்ளுபவர்கள், ஒரு அபத்த நிகழ்வால் வேலையை ராஜினாமா செய்ய வேண்டிவர, தனக்கு மட்டுமே தெரிந்த உண்மை தன்னைக் காப்பாற்றும் என்ற நிலையில், தான் வாழ்வு முழுக்க சொல்லி வந்த பொய்யை வெளிப்படுத்த விரும்பாத, அந்த உண்மை தரக்கூடிய கசப்புணர்வைவிட ராஜினாமாவே மேல் என்று முடிவெடுக்கும் Coleman Silk (The Human Stain) போன்ற பிடிவாதக்காரர்கள்- எத்தனை பலவீனங்கள் இருந்தாலும், எத்தனை இடர்ப்பாடுகளை சந்தித்தாலும், உறுதியான மனநிலை உடையவர்கள் இவர்கள். ஆனால் ஒருபோதும் கழிவிரக்கத்துக்கு இடம் கொடுப்பவர்கள் அல்லர் (வெளிப்படையாகவேணும்). எவரும் இவர்களை விரும்பலாம், வெறுக்கலாம் ஆனால் ஒதுக்க முடியாது.

Testosteroneஆல் உந்தப்படும் இத்தகைய ஆண் பாத்திரங்களின் மிகச் சிறந்த உதாரணம் Sabbath’s Theater நாவலின் Mickey Sabbath/ மிகி சபத் என்றால், இதற்கு நேர் எதிரான பாத்திரம் ‘American Pastoral’ நாவலின் ‘Seymour “Swede” Levov/ஸ்வீட்.
ஆபாசமாக நடந்து கொண்டதாக போடப்பட்ட வழக்குகள், தன் மகளின் அறையில் நண்பன் தங்க அனுமதிக்க, நண்பனின் 20 வயது மகளின் உள்ளாடைகளைக் கொண்டு கைப்புணர்ச்சி செய்யும், நண்பனின் மனைவியிடம் நூல் விடும், 64 வயதான சபத்தின் வாழ்வே சமூகத்தின் எந்த விதிக்கும் கட்டுப்படாத (விதிகள் என்பதே இல்லை என்பதே இவரின் விதியாக இருக்கக்கூடும்,) களியாட்டம் (orgy) எனலாம்.
மறுபுறம் ஸ்வீட். கல்லூரி காலத்தில் விளையாட்டு வீரரான, இவரின் மஞ்சள் நிற தலைமுடி/நீல நிறக் கண்கள் Nordic தேசத்தைச் சேர்ந்தவரை நினைவூட்டுவதால் ஸ்வீட் (Swede), என்ற பட்டப் பெயர் உடையவர். மனசாட்சிக்குக் கட்டுப்பட்ட, இளமையில் தந்தை சொல் மீறாத, தந்தையின் வியாபாரத்தை ஏற்று திறம்பட நடத்தும், தான் தந்தையானவுடன் தன் பதின்பருவப் பெண்ணைப் பற்றிய அதீத கவலை கொண்ட, மனைவி மீது அன்பு கொண்ட ஆசாமி இவர். அழகு, பணம், அன்பான மனைவி/ குழந்தை என ‘American Dream’ஐ அடைந்தவர் போல் இவர் வாழ்வு வெளியிலிருந்து பார்க்கத் தெரிகிறது. குடும்பத்தின் மீது அதீத அக்கறை/ கவலை கொண்ட ராத்தின் ‘யூத தந்தை’ பாத்திரங்களின் அச்சு அசல் உருவம் இவர். மற்றவர்கள் அதிகமும் ‘உப-பாத்திரங்களாக’ இருக்க, இவர் நாவலின் மைய பாத்திரமாக இருப்பதே முக்கிய வித்தியாசம்.
சபத் தன் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் எந்த மெல்லிய பிணைப்பையும் உடைக்க நினைத்தால், ஸ்வீட் அத்தகைய பிணைப்புக்களை வரவேற்பது போல் தோன்றுகிறது.
சபத்துக்கு கொஞ்சம் கூட ஒவ்வாத சமூக கட்டுப்பாடுகள், ஸ்வீடுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை அளிக்கக்கூடும். இருவரும் பல விதங்களில் வேறுபட்டு இருந்தாலும், வாழ்வு அவர்களுக்கு அளிக்கும் அனுபவங்கள் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்கின்றன என்பது ஒரு நகைமுரண்தான்.
சபத்தின் வாழ்வு, , விபத்தை நோக்கி மிக விரைவாகச் செல்லும் தறிகெட்ட வாகனம் போன்றது என்பதால், அவர் வாழ்வின் சம்பவங்கள் வாசகனுக்கு ஆச்சர்யமளிப்பதில்லை. மாறாக, தானே உருவாக்கும் ஒவ்வொரு சிக்கலிலிருந்தும், இந்த மனிதர் எப்படி மீண்டு, மீண்ட அடுத்த கணமே அடுத்த சிக்கலுக்கு அடிபோடுகிறார் என்பதே வியப்பளிக்கிறது. கட்டுப்பாடான வாழ்வை நாடும் ஸ்வீடுக்கோ, தன் பதின்வயது மகள், ஸ்வீட் அவருக்காக எண்ணியிருந்த வாழ்விலிருந்து திசை திரும்புதல், தன் மனைவி துரோகமிழைத்தல் என்று தான் மேய்ப்பராக உருவாக்கிய ‘pastoral’ கொஞ்சம் கொஞ்சமாக சிதைவதைப் பார்க்கவேண்டிய அவலம் நேர்கிறது. சபத் pastoral என்பதையே வெறுப்பவராக, scorched earth policy உடையவராக இருப்பார். மனைவி தனக்கு துரோகமிழைத்தால் சபத் அதற்கு வருந்தவோ, கடிந்து கொள்வார் என்றோ எண்ண முடியாது, இதுதான் சாக்கு என்று அவர் அடுத்த பெண்ணைத் தேட ஆரம்பித்துவிடுவார் (அந்த நேரத்தில் அவர் இன்னொரு பெண்ணிடம் உறவில் இல்லாமலிருந்தால்)
ஆயிரம் பிழைகள் இருந்தாலும், “Beloved Whoremonger, Seducer, Sodomist, Abuser of Women, Destroyer of Morals, Ensnarer of Youth, Uxoricide, Suicide” என்று தன் கல்லறையில் பொறிக்கச் சொல்லும், தன்னைக் குறித்த எந்த மேலான கற்பனையும் இல்லாத, தன்னை நன்கறிந்துள்ள சபத்தை, நாம் முற்றிலும் வெறுக்க முடியுமா என்ன? 64 வயதில் ஒருத்தியுடன் மட்டும் வாழ வேண்டும் என்றவுடன் கொதிப்படையும் முதியவரை அந்த நேர்மைக்காகவாவது நாம் மதிக்க வேண்டும். சிறு வயதில் சகோதரனை இழந்து, அந்த இழப்பைத் தாங்காமல் தாயும் இறக்க, இந்த நிகழ்வுகளில் இருந்து மீண்டு வராத, இன்னும் சிறுவனாகவே இருக்கும் ஒருவனின் பாவனைகளோ இவை அனைத்தும் என்றும் தோன்றுகிறது.
ராத் பெண் வெறுப்பு கொண்டவர் (misogynist) என்று விமர்சிக்கப்படுபவர். அதை அவர் ஏற்பதில்லை என்றாலும், இந்த இரு பாத்திரங்களை முன்வைத்தும் அத்தகைய விமர்சனங்களை வரக்கூடும், அவற்றுக்கான நியாயமும் இந்த நாவல்களில்/பாத்திரங்களில் உள்ளன. சபத் பெண்களைப் போகப் பொருளாகவே பார்க்கிறார் என்ற தொனி நாவல் முழுக்க உள்ளது. ஸ்வீடைப் பொருத்தவரை, அவரின் பாசத்தை அவர் மகளும்/மனைவியும் புரிந்து கொள்ளாமல் , தங்களின் செயல்பாடுகளால் ஸ்வீடுக்கு துன்பமளிக்கிறார்கள். ஆக பெண்கள் எதிர்மறையாகாவே வார்க்கப்பட்டுள்ளார்கள் என்ற விமர்சனம் எழுவது இயல்பே.
இதை இன்னொரு கோணத்தில் பார்ப்போம். சபத்தின் அனைத்து செயல்களும் சிறுவயது இழப்பிற்கான எதிர்வினையே (அதற்காக மற்றவர்களிடம் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாமா என்ற எதிர் கேள்வியும் எழுப்பலாம்). ஸ்வீடின் மகளைப் பொருத்தவரை அவர் ஒரு அரசியல் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு, சில செயல்கள் செய்கிறார், அவ்வளவே. ஸ்வீடை காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் அவருக்கில்லை என்றும் நாம் சொல்லலாம். எனில், இங்கு பெண் மறுப்பு என்பது இல்லையா என்று கேட்டால், ஆம்/இல்லை என்று இரண்டு பக்கமும் ‘Devils Advocate’ போல் வாதிட முடியும் என்று தான் சொல்ல முடியும்.
Sabbath’s Theaterம் American Pastoralம் அடுத்தடுத்து வெளியானவை (முறையே 1995 மற்றும் 1997ஆம் ஆண்டுகளில்). தன் ஆண் பாத்திரங்களின் உச்சகட்ட வகைமாதிரியை படைத்த கையோடு அடுத்த நாவலிலேயே அதற்கு நேர் எதிரான பாத்திரத்தை ராத் படைத்தது சுவாரஸ்யமான ஒன்று தான் (“…wanted to write about a conventionally virtuous man. I was sick of Mickey Sabbath and I wanted to go to the other end of the spectrum….” என்று ராத் சொல்கிறார்). இந்த இரு பாத்திரங்களையும் வெளியிலிருந்து பார்க்கலாம், விமர்சிக்கலாம், சிலாகிக்கலாம், ஆனால் அந்த வாழ்வை நடைமுறையில் வாழ விழைவது என்பது இயலாத ஒன்று.
சபத்தின் வாழ்கைமுறையா அல்லது ஸ்வீடின் வாழ்க்கை முறையா என்று அந்தரங்கமாக ஒரு கேள்வி எழுப்பினால், பெரும்பாலான ஆண்கள் சபத்தின் பக்கம்தான் இருப்பார்கள். ஆனால் நடைமுறையில் அத்தகைய கட்டுப்பாடற்ற, யாருக்கும் அடங்காத வாழ்வை வாழ்வது என்பது மிகவும் சிலருக்கு மட்டுமே சாத்தியம். சமூக விதிகளுக்கு அடங்கி, அது நமக்கு ஏற்புடையது இல்லை என்றாலும், வெளிப்பார்வைக்கேனும் அனைவருடனும் ஒத்துப் போகும் வாழ்வையே பெரும்பாலானோர் விரும்புவர். அதே நேரம், அனைவருக்கும் நன்மை செய்ய எண்ணி, பொறுப்பானவராக இருந்து, இறுதியில் , தான் மிகவும் நேசித்தவர்களாலேயே வஞ்சிக்கப்பட்டு, ” And what is wrong with their life? What on earth is less reprehensible than the life of the Levovs?” என்ற நாவலின் இறுதியில் வரும் ஸ்வீடின் வாழ்வு குறித்த கேள்வியோடு நாவல் முடியும்போது, தன் வாழ்வின் துன்பங்களுக்கு இணையாக இன்பங்களையும் நுகர்ந்த/ நுகரும் சபத்தின் வாழ்வோடு ஒப்பிடுகையில், அனைவரிடமும் சரியான முறையில் நடக்க வேண்டும் என்ற ஸ்வீட் வாழ்வில் மோசமான துன்பங்களைச் சந்திக்க அவர் செய்த குற்றம் என்ன (அனைவரிடமும் அவர் கொண்ட அதீத அக்கறையா?) என்று யாரும் எளிதில் பதில் சொல்ல முடியாது.
இன்னொரு புறம், தற்கொலை குறித்து சிந்தித்து “And he couldn’t do it. He could not fucking die. How could he leave? How could he go? Everything he hated was here.” என்று ‘Sabbath’s Theater’ முடியும்போது சபத்தின் நிலையும் ஒன்றும் சிலாக்கியமானதாக இல்லைதான் என்று தோன்றுகிறது.
தங்கள் வாழ்வின் வறட்சியின் கொதிநிலையை இருவரும் அடைவதோடு நாவல்கள் முடிவது எதை உணர்த்துகிறது? ஒருவர் கொஞ்சம் கூட புலனடக்கம் இல்லாமல், தன் இச்சைகளைத் தவிர வேறு எதைப்பற்றியும் கவலை இல்லாமல் வாழ்ந்தாலும் சரி, அல்லது எப்போதும் சமூகத்தை அனுசரித்துப் போகும், நியாமான வாழ்வை முயற்சித்தாலும் சரி, இறுதியில் வாழ்கை எப்படியும் அவர் மீது காரி உமிழத்தான் போகிறது என்று ராத் சொல்வதாக கொள்ளலாமா? இங்கு இன்னொரு கோணத்தைப் பார்ப்போம். ஸ்வீட் நாவலின் இறுதியில் தெரிந்து கொள்ளும் உண்மையில் இருந்து மீண்டு வருவாரா என்பது நமக்குத் தெரியாது, மீள வேண்டும் என்று வாசகன் விரும்பினாலும், அது குறித்த நம்பிக்கை அவனுக்கு அதிகம் இல்லை. ஆனால் சபத்துடைய இந்த பித்து நிலை, கண நேரத்திற்கானது, இதிலிருந்து அவர் மீள்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன என்று வாசகன் உறுதியாக நம்ப முடியும். எனில் எப்போதும் அனுசரித்துப் போவதை விட, எப்போதும் வெளியாளாக (outsider), தன்னியல்போடு இருப்பதே மேல் என்றும் புரிந்து கொள்ளலாம்.
பின்குறிப்பு:
தன் படைப்புக்களில் தனக்கு மிகவும் பிடித்த பாத்திரங்கள் என சபத் மற்றும் ஸ்வீடை ராத் குறிப்பிடுகிறார். இருவருக்குள்ள வித்தியாசம் மட்டுமின்றி, அவர்களின் தனித்தன்மையும் கூட இவர்களை ராத்தின் புனைவுலகின் மிக முக்கிய பாத்திரங்களாக்குகிறது.

No comments:

Post a Comment