Monday, June 1, 2015

லூயிஸ் ஏட்ரிக்கின் THE ROUND HOUSE - Louise Erdrich

பதாகை இதழில் வெளிவந்தது -http://padhaakai.com/2015/05/24/the-round-house/
-------------------------
ஒரு சிறு நகரம்/ டவுன், அதில் இரு இனக்குழுக்களுக்கிடையே நிலவும் அதிகார சமத்துவமின்மை, பிறரால் ஒதுக்கப்படும்/ கேலியாகப் பார்க்கப்படும் ஒருவர், ஒரு கொடூர குற்றம், அதிகார சமமின்மையினால் அந்த குற்றத்திற்கான நீதி கிடைப்பதில் உள்ள (சட்ட ரீதியான/ அல்லாத) தடைகள், அவற்றை மீறி நீதிக்குப் போராடும் ஒருவர், இவை அனைத்தையும் விரிந்த விழிகளால் பார்த்தபடி புரிந்து கொள்ள முயலும் பதின்பருவ வாயிலில் இருக்கும் கதைசொல்லி என ஒரு நாவலைப் பற்றி விவரிக்கும்போது ‘To Kill a Mockingbird’ முதலில் நினைவுக்கு வருவது இயல்பே. ஆனால் நாம் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போவது லூயிஸ் ஏட்ரிக்கின் (Louise Erdrich) ‘The Round House’ நாவலைப் பற்றி.
‘To Kill a Mockingbird’ நாவலின் நினைவு வந்தாலும், ‘The Round House’ஐ அதன் தழுவலாகவோ, அதன் தாக்கம் மிகவும் அதிகம் உள்ளதாகவோ சொல்ல முடியாது. இரு நாவல்கள் இணையும் புள்ளிகளுக்கு இணையாகவோ அல்லது அதிகமாகவேகூட விலகும் புள்ளிகள் உள்ளன. இணையும் புள்ளிகளும்கூட இரு நாவல்களிலும் உள்ள, எல்லா காலத்திற்கும்/ நாட்டிற்கும் பொருந்தக்கூடிய மைய அம்சத்தினால் தன்னிச்சையாக ஏற்பட்டிருக்கக்கூடும். எப்படி இருப்பினும், வாசகருக்கு இத்தகைய ஊடுபாவுகள், சுவாரஸ்யமானவையாக தோன்றுகின்றன.
நாவலின் சம்பவங்களுடன் நேரடியாக சம்பந்தப்படாத/ (இறுதிப் பகுதி வரைக்குமாவது) பாதிக்கப்படாத கதைசொல்லியின் பார்வைக்கு மாறாக, அந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர் கதைசொல்லியாக இருப்பது ‘To Kill a Mockingbird’ நாவலில் இல்லாத முகத்திலறையும் குரூரத்தை வாசகனுக்கு முதலிலேயே கடத்துகிறது.
அமெரிக்க பூர்வகுடிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள (அவர்களை ஒதுக்கி வைக்க ஏற்படுத்தப்பட்டுள்ள) நிலத்தில் (reservation) வசிக்கும் தன் தாய் வன்புணர்ச்சி செய்யப்பட்டதை கதைசொல்லி நினைவு கூர்வதிலிருந்து நாவல் ஆரம்பிக்கிறது.
அந்த துர்ச்சம்பவத்தால் மனதளவில் மிகவும் பாதிக்கப்படும் கதைசொல்லியின் தாய் பேசவே மறுக்கிறார். இதனால் குற்றமிழைத்தவரை அடையாளம் காண்பதில் சிக்கல். அடுத்த சிக்கல் குற்றம் நடந்த இடம் பூர்வகுடிகளின் ஆளுமைக்குட்பட்டது அல்ல என்பதால், அவர்களின் சட்டம் அங்கு செல்லாது என்பதால், வெள்ளையர்களின் விசாரணை (அதாவது விசாரணையில் அவர்கள் காட்டும் சுணக்கம்), இந்த சம்பவத்திற்கான நீதி கிடைப்பதில் தாமதத்தையும், எப்போதாவது கிடைக்குமா என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது. பூர்வகுடிகள் வசிக்கும் இடத்தில் நடக்கும் சம்பவங்களுக்கு நியாயம் வழங்கும் நீதிபதியாக உள்ள கதைசொல்லியின் தந்தையின் கைகளும் கட்டப்பட்டுள்ள நிலையில், அந்த சம்பவம் குறித்து கதைசொல்லியே விசாரணை செய்யத் துவங்குகிறார்.
‘இனிட் ப்ளைடனின்’ சிறார் துப்பறியும் நாவல் போல் சென்றிருக்கக்கூடிய ஜோ செய்யும் விசாரணைகளை பரபரக்க வைக்கும் சம்பவங்களாக ஆக்காமல், ஒரு சிறுவன் செய்யக்கூடிய இயல்பான ஒன்றாகவே காட்டுவதன் மூலம் வாசகன் துப்பறிதலின் பரவசத்தில் அந்த துர்ச்சம்பவத்தை மறந்து நாவலின் மையத்திலிருந்து விலகிச்செல்ல முடியாதபடி செய்கிறார். ஜோ என்ன செய்தாலும், எங்கு திரும்பினாலும், திறக்கப்பட முடியாத கதவுகளே உள்ளன, குற்றவாளி யார் என்று தெரிந்தும், அவன் மேலும் திமிருடன் மீண்டும் இவர்களை சீண்டுகிறான் என்பது தெரிந்தும், அவனை ஏன் யாரும் தண்டிக்கவில்லை என்பதை கதைசொல்லியால் புரிந்து கொள்ள முடியவில்லை.
சட்டம் குறித்த கருப்பு/ வெள்ளை பார்வை கொண்ட சிறுவனாக இருந்தாலும் ஜோ ஏதுறியாதவன் அல்ல. பதின்பருவத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் அவனுக்கு அந்த பருவத்திற்குரிய குறும்புகள், பாலியல் கிளர்ச்சிகள் அனைத்தும் உள்ளன. (ஒரு கட்டத்தில் தன் சித்தியுடன் சேர்ந்து, முறைதவறிய விதத்தில் கணிசமான தொகையைப் பதுக்கி வைக்கிறான். இதற்கு பணத்தின் மீதுள்ள ஆசையைவிட, சித்தி மீதுள்ள கிளர்ச்சியே அவர் சொல்வதைப் போல் செய்யத் தூண்டுகிறது) அவை தவறு என்று அவனுக்கு தோன்றினாலும், அவற்றை மீண்டும் மீண்டும் ருசிக்கவே விரும்புகிறான். (அவ்வப்போது சித்தியின் கடைக்குச் சென்று அவருடன் பேசுவது போல் அவர் உடலை நோட்டம் விடுகிறான்)
சட்டத்தின் வரம்புகளால் கட்டிப்போடப்பட்டுள்ளதை வெறுத்தாலும், அதை வெளிக்காட்டாமல், அந்தத் தளைகளை உடைக்காமல் தன் பதவிக்கேற்ப சட்டத்தின்படியே செல்ல முயலும் நீதிபதியாக – சட்டத்தின் நுட்பங்களை, அது பல நேரம் பாதிக்கப்பட்டவர்களுக்கே எதிராக உள்ளதை அறிந்திருந்தாலும், அதை மீறக் கூடாது என்பதைத் தன் மகனுக்கு புரியவைக்க முயலும் தந்தையாக – எதிலும் விருப்பமில்லாமல், விலகியே இருக்கும் மனைவியின் (catatonic) மனநிலை கண்டு மருகும் தகப்பன் பேஸில் (Bazil) பாத்திரம், ஆட்டிகிஸ் பின்ச் (Atticus Finch) பாத்திரத்தை சற்று நினைவூட்டினாலும், தனக்கான தனித்துவம் கொண்டது.
எப்போதும் எல்லோரிடமிருந்தும் விலகியே இருப்பது, கொஞ்சம் சத்தம் கேட்டாலும் பயப்படுவது என ஒரு சில கட்டங்கள் தவிர்த்து, ஜோவின் தாய் பற்றி வாசகன் யூகிக்கக் கூடியதே அதிகம். இந்தப் பாத்திரத்தை ஏட்ரிக் இன்னும் விரிவாக ஆக்கி இருக்கலாம் என்று விமர்சிக்கலாம் என்றாலும், நாவல் முழுதும் ஜோவின் பார்வையிலே நகர்வதால், அவன் கோணத்திலிருந்து இதை விட அதிகம் கூறி இருக்கவும் முடியாது. உதாரணமாக இந்த நிகழ்வால் தம்பதியரின் உறவில் ஏற்படும் மாற்றம்- பேஸில் தங்களின் படுக்கையறையில் படுக்காமல், வெளியே படுக்கிறார், அதை ஜோ பார்ப்பதாக ஒரு இடம் வருகிறது, அது மேலும் விவரிக்கப்படவில்லை. இந்த காட்சியில், அதன் பின்னால் உள்ள உளவியலை ஜோ அதிகம் அறிந்திருக்க முடியாது.. எனவே ஜோவின் தாய் இந்த நிகழ்வால் பாதிக்கப்படுவதை/ ஆவர் இந்தக் குற்றத்தை எதிர்கொள்வது குறித்த பல விஷயங்களை வாசகனின் யூகத்திற்கு விடுவது, நாவலின் கதைசொல்லல் முறைக்கு ஒத்துப்போவதாகவே உள்ளது.
ஏட்ரிக்கின் மற்ற படைப்புக்களைப் போல, முக்கிய பாத்திரங்கள், அவர்கள் வாழ்வில் நடக்கும் சம்பவங்களோடு, அமெரிக்க பூர்வ குடிகளுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தில் (reservation) உள்ள நிகழ்கால வாழ்க்கை முறை, அவர்களின் தொன்மங்கள், என இந்த நாவலிலும் சில விஷயங்கள் உள்ளன. முதியவர்கள் தங்கள் பேச்சினுடே பாலியலை அனாயசமாக கலந்து பேச , அதை இளைஞர்கள் /மத்திய வயதுடையவர்கள் கூச்சத்துடன் எதிர்கொள்வதை காண்கிறோம்.
“I had a fat Indian for a husband at one time…..His pecker was long and big but only the head reached past his gut.
And of course I didn’t like to get underneath him anyway for fear of getting smashed..
His belly grew big as a hill and I couldn’t see over it. I’d call out, Are you still back there? Holler to me!”,
என்று ஒரு மூதாட்டி சொல்லும் போது, தன் வயது கொடுக்கும் பாதுகாப்பால், நாகரீகம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட தளைகளை உடைத்தெறியும், எந்த நாட்டிலும் காணக்கூடிய முதியவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். ஆனால் இவை வெறும் தகவல் துணுக்குக்களாக நாவலில் துருத்திக்கொண்டிருப்பதாக இல்லாமல், ஒரு முழு உலகை உருவாக்குகின்றன. உதாரணமாக “sweat lodge/round house”அவர்களால் அழைக்கப்படும் இடத்தில் நடைபெறும் பழங்குடி சடங்குகளை விவரிக்கும், மாயத்தன்மை உடைய ஒரு பகுதி நாவலில் உள்ளது.
இன்னொரு புறம், “Youth Encounter Christ” என்ற கிறிஸ்துவ முகாம் பற்றிய வர்ணனையும், தேவாலயத்தில் ஒரு பெண்ணுடன் உறவு கொண்டதை பாதிரியாரிடம் ஒப்புதல் வாக்குமுலம் (confession) கொடுக்கும் சம்பவமும், வாக்குமுலம் கொடுத்தவனை வெறித்தனமானாக துரத்திச் செல்லும் பாதிரியாரின் எதிர்வினையும் நாவலில் உண்டு. இவை இரண்டும் தனித்தனி சம்பவங்களாக, நாவலின் மையத்திற்கு தொடர்பில்லாதவையாக தோன்றக்கூடும். (பாதிரியார் சம்பந்தப்பட்ட நிகழ்வு நகைச்சுவைக்காக திணிக்கப்பட்ட சம்பவமாக வாசகன் எடுத்துக்கொள்ளலாம்). ஆனால், கிறிஸ்துவம் அவர்களிடையே செலுத்தும் தாக்கம், அதன் பரவலாக்கம் ஒரு பக்கமிருக்க, தங்கள் பழங்கால சடங்குகளை அவர்கள் விட்டுக் கொடாதிருத்தல், இரண்டையும் ஒரே நேரத்தில் பேணுவதை இயல்பான ஒன்றாகக் கருதுதல் என அவர்கள் இன்றைய வாழ்க்கை முறையை நுட்பமாக இந்த இரண்டு சம்பவங்களும் சுட்டுகின்றன. இந்த மனநிலையும் நாம் காணக்கூடியதே.
தொன்மங்களைப் பற்றி வரும் சிறு பகுதியைத் தவிர, மற்ற பகுதிகளில் ‘அட’ போட வைக்கும், நினைவில் தங்கும் விவரணைகளோ, உரையாடல்களோ இல்லாத, இறுக்கமில்லாத, தெளிவான, வாசகனை அவனையறியாமல் நாவலுக்குள் இழுத்து, அதன் நிகழ்வுகளில் தனக்கும் பங்கு உள்ளதாக, அதன் நன்மை தீமைகள் தன்னையும் பாதிக்கும் என்பதாக உணரச் செய்யும் உரைநடை இந்த நாவலில் உள்ளது. (தான் சொல்ல வரும் செய்திக்கேற்ப தன் நடையை நுட்பமாக ஏட்ரிக மாற்றுவதை அவரின் மற்றப் படைப்புக்களிலும் பார்க்க முடிகிறது. ‘The Plague of Doves’ சிறுகதையில் உள்ள கனவுத்தன்மை ஒரு உதாரணம்)
தன் தாய்க்கு நீதி கிடைக்க தாமதமாவதை பார்க்கும் ஜோ, அது கிடைக்குமா என்று சந்தேகிக்க ஆரம்பிக்கிறான். மனதளவில் கொதி நிலையை அடையும் அவன் செய்யும் சில செயல்கள், அதன் விளைவுகளோடு நாவல் முடிகிறது. நீதி முழுமையாகக் கிடைக்காவிட்டாலும், வாசகனுக்கு கொஞ்சமேனும் ஆசுவாசமளிக்கக் கூடியதாக ‘To Kill a Mockingbird’ முடிகிறது. இதிலும் ஏட்ரிக், ஹார்பர் லீயுடன் இணைந்தும் விலகியும் இருக்கிறார். பாதிக்கப்பட்டவரின் கோணத்தில் நாவல் நகர்வதால் ஆசுவாசம் என்பது நிஜத்தில் கிடைக்கக் கூடியது அல்ல என அவர் முடிவு செய்திருக்கலாம், எல்லா செயல்களுக்கும் ஒரு விளைவு உள்ளது என்பதை நாவலின் இறுதியில் நடக்கும் சம்பவம் நமக்குச்\ சுட்டுகிறது.
எனினும், முழு அவநம்பிக்கையை அளிக்கும் நாவல் அல்ல இது. பிறந்தவுடன் பெற்றோர்களால் ஒதுக்கப்பட்ட லிண்டா (Linda) ஒரு காட்சிப் பொருளாக மற்றவர்களால் பார்க்கப்படுகிறார் (Boo Radley /பூ ராட்லியைப் போல). ஜோ அவரை ஏமாற்ற முயல்கிறான், அதில் வெற்றி பெற்றதாகவும் நினைக்கிறான். ஆனால் ஜோ செய்த செயலால் தான் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று தெரிந்ததும், இறுதியில் அவர் எடுக்கும் முடிவு, உறவுமுறை பாசத்தைத் தாண்டி அறம் சார்ந்து ஒருவர் இருக்க முடியும், தனக்கு தீங்கு செய்தவர்களையும் மன்னிக்க முடியும், நீதியும் கருணையும் எப்போதும் முற்றிலும் வழக்கொழிந்து போகாது என்ற நம்பிக்கையை எந்த விதமான அதீத உணர்சிக் கொந்தளிப்பும் இல்லாமல் வாசகனிடம் விதைப்பதோடு அவனை நெகிழவும் செய்கிறது. இந்த விதத்தில் ஹார்பர் லீயுடன் ஏட்ரிக் ஒத்துப்போகிறார்.
“Tenth Of December” சிறுகதை தொகுப்பின் தலைப்புக் கதையில் ஜ்யொர்ஜ் ஸாண்டர்ஸ் “…now saw that there could still be many—many drops of goodness, is how it came to him—many drops of happy—of good fellowship—ahead, and those drops of fellowship were not—had never been—his to withheld.” என்று சொல்வதையும் இங்கு நினைவு கூரும்போது, வேறு வேறு எழுத்தாளர்கள், வேறு வேறு களங்கள்/ பாத்திரங்கள்/ நிகழ்வுகள் இருந்தும் அடிப்படை கருவாக ஒரே விஷயம் இயல்பாகவே உருவாகி வருவதை காண முடிவதோடு, சிறந்த படைப்பு என்பது, மற்ற படைப்புக்களுடன் உள்ள ஒற்றுமை/ வேற்றுமைகளைத் தாண்டி, தனித்தன்மையோடு இருப்பதுடன், வாழ்வின் ஆதார விசைகளில் ஒன்றைப் பற்றிப் பேசுகின்றன என்பதை உணர முடிகிறது.
பின்குறிப்பு
1. இந்த நாவலின் கதைசொல்லி ஜோ, நாவலின் சம்பவங்களால் எதிர்மறையாக பாதிக்கப்படாமல், தன் வாழ்வை அமைத்துக் கொண்டான் என்று அவனின் நிகழ்காலத்திலிருந்து நாம் அறிகிறோம். அதே போல் ஸ்கௌட் பின்ச் (Scout Finch), வாழ்வு எப்படி மாறியது என்பதை அறிந்து கொள்வதற்கான ஐம்பத்து இரண்டு ஆண்டுகால காத்திருப்பு “Go Set a Watchman” நாவல் அடுத்த மாதம் வெளிவருகையில் முடிவுக்கு வரவிருக்கிறது.
2. ஏட்ரிக்கின் நாவல்கள்/ சிறுகதைகளில் பாத்திரங்கள்/ சம்பவங்கள்/ நிலவியல் சார்ந்து ஒரு தொடர்ச்சி உள்ளதை கவனிக்க முடியும், அதே நேரம் அவை தனி படைப்புகளாக வாசிக்கக் கூடியவையாகவும் இருக்கின்றன.

No comments:

Post a Comment