Monday, June 15, 2015

குடும்ப அமைப்பின் இருண்மையை விவரிக்கும் எழுத்தின் எழுச்சி / THE RISE OF DOMESTIC NOIR – கில்லியன் ப்ளின்

பதாகை இதழில் வெளிவந்தது - (http://padhaakai.com/2015/06/07/gillian-flynn-2/)
----------------
தன் உடலில் தானே காயங்களை ஏற்படுத்திக்கொள்பவர், சிறு வயதில் நடந்த கொடூரச் சம்பவத்தால் எந்தவிதமான உறவுகளையும் தக்கவைத்துக் கொள்ள முடியாதவர், அனைத்து உறவுகளையும் ஆடு புலி ஆட்டமாக பாவித்து, வெற்றி பெறுவதையே முக்கியமானதாக எண்ணுபவர் என மனதளவில் உடைந்தவர்களாக, சமூகத்துடன் ஒன்றக்கூட முடியும் ஆனால் குடும்பம் என்ற அமைப்பில் ஒன்ற முடியாமல் திணறும், கில்லியன் ப்ளின் (Gillian Flynn) மூன்று நாவல்களின் முக்கியமான பெண்பாத்திரங்களின் குணாதிசயங்கள் வித்தியாசமானவை.
பெண்கள் முக்கிய பாத்திரமாக – மென்மையானவர்களாக, தூய்மையே உருவானவர்களாக இல்லாமல் – சிக்கலான பாத்திரங்களாக வரும் குற்றப்புனைவுகள் புதிதல்ல.  மனநல காப்பகத்தில் சிகிச்சை பெறும், மதுவிற்கு அடிமையான பெண் பாத்திரங்கள் கொண்ட டெனீஸ் மினாவின் (Denise Mina) நாவல்கள்/ பாத்திரங்கள் ஒரு உதாரணம். தன் தந்தையாலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர் மினாவின் நாயகி, ஆனால் அது நாவலின் மையம் அல்ல, அவர் சந்திக்கும் ஆபத்துக்கள் குடும்பம் அல்லாத வேறு இடங்களில் வருகின்றன. இங்கு அவரின் குடும்பச் சூழல், அவர் பாத்திரத்தை இன்னும் கனமாக்க உதவுகிறதே அன்றி நாவலில் நடக்கும் குற்றத்திற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை.  மேகன் ஆபட்டின் (Megan Abbot) நாவல்களில் பதின் பருவப் பெண்களில் சிக்கல்கள், போட்டி/ பொறாமைகள் குற்றப்புனைவாக மாறுகின்றன. இங்கு பெண்களுக்கான ஆபத்து என்பது அவர்களின் நட்பில் இருந்து வருகிறது.  கடும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான Millennium Trilogyன் ‘சலண்டர்’ (Salander),  தன் கடந்த காலம் தந்த வலிகள் இன்னும் சுமந்து கொண்டிருந்தாலும், சமூகத்தை ஒதுக்கி, தன் கணினி திறமையால், வேறு விசாரணைகள்/ வழக்குக்களில் தன் திறமையை காட்டுகிறார்.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் சூழலை முன்வைத்து குற்றப்புனைவுகள் வந்துள்ளன (‘Arnaldur Indriðason ‘ , ‘Camille Lackberg’). இவற்றில் பாதிக்கப்படும் பெண்கள் பற்றிய விசாரணையை இன்னொருவர் செய்கிறார். இங்கு மூர்க்கமான கணவன், அவனிடம் அல்லல்படும் மனைவி என விஷயம் கருப்பு/ வெள்ளையாக உள்ளது.
இப்படி பல எழுத்தாளர்கள் இருக்க, இவர்களிடமிருந்து ப்ளின் எவ்வாறு வேறுபடுகிறார்?
ப்ளின்னின் நாவல்களின் மையம் என்பது முற்றிலும் ‘குடும்பம்’ என்ற அமைப்பும், அது ஏற்படுத்தக்கூடிய மூச்சுத்திணறலும்தான் (claustrophobia) . இவரின் பாத்திரங்கள் சந்திக்கும் சவால்கள்/ சோதனைகள்/ ஆபத்துக்கள் அனைத்தும் குடும்பத்திற்குள் இருந்தே தோன்றுகின்றன. தாய், தந்தை, அண்ணன்/ தங்கை, கணவன்/ மனைவி என அனைத்து உறவுகளிலும் ஆபத்து மறைந்துள்ளது. கணவன் மனைவியை அடிப்பது போன்று வெளிப்படையான எந்த முறிவும் இந்த உறவுகளில் தெரிவதில்லை. சாப்பாட்டு மேஜையில், பேசிக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கணவன் -மனைவி , உள்ளுக்குள் புகைந்து கொண்டு, ஒருவரை ஒருவர் கொல்லத் திட்டமிடுவதைப் போன்றது இந்த நாவலில் வரும் உறவுச் சிக்கல்கள்.

தன் பத்திரிக்கையாளர் வேலை சம்பந்தமாகக்கூட தான் பிறந்த ஊருக்குச் செல்வதை கமீல் (Camille) வெறுக்கும் அளவிற்கு (Sharp Objects) குடும்பம் இவர்களை பாதித்துள்ளது. இப்படி குடும்பம் சம்பந்தப்பட்ட, குடும்பம் சார்ந்து கடும் உளக்காய்ச்சலில் இருக்கும் பெண்கள் பற்றிய குற்றப்புனைவுகள் “இல்லற நுவார்” (Domestic Noir) என்று வகைப்படுத்தப்படுகின்றன. Julia Crouch என்ற எழுத்தாளர் 2013ஆம் ஆண்டு தான் உருவாக்கிய இந்தப் பதத்தை
“In a nutshell, Domestic Noir takes place primarily in homes and workplaces, concerns itself largely (but not exclusively) with the female experience, is based around relationships and takes as its base a broadly feminist view that the domestic sphere is a challenging and sometimes dangerous prospect for its inhabitants. That’s pretty much all of my work described there.”
என்று விளக்கிறார். இந்த விளக்கம், அதற்கு முன்பும்/ பின்பும் வெளிவந்த படைப்புக்களுக்கும் பொருத்தப்பட , 2005ல் தன் முதல் நாவலை வெளியிட்ட ப்ளின்னும் இதில் சேர்க்கப்பட்டார்.
இன்னொரு கோணத்தில் பார்த்தால் ‘இல்லாமலாகிய இல்லறம்’ பற்றிய நாவல்களின் (Dysfunctional family novels) பாத்திரங்கள் குற்றங்களில் ஈடுபட்டால் ‘Domestic Noir’ஐ வந்தடைய முடியும்.  எனவே இந்த வரையறைகள் நெகிழ்வானவைதான்.  ஒரே எழுத்தாளர்  ஒன்றுக்கு மேற்பட்ட வகைமையில் சேர்க்கத்தகுந்த படைப்புகளைத் தரக்கூடும். தான் எண்ணியே இராத வகைமைக்குள் ஒரு எழுத்தாளர் அடைக்கவும் படக்கூடும். ப்ளின்னின் படைப்புகளையுமேகூட ‘சிறுநகர நுவார்’ (Small Town Noir) என்றும் வரையறை செய்யலாம். ஒரே இடத்தில் பல்லாண்டு காலம் வாழ்ந்து, பல கசப்புக்களை/ பொறாமைகளை/ ரகசியங்களைச் சுமந்து கொண்டிருக்கும் சிறு நகரங்களே இவரின் கதைக்களன். தன் ஊரான ‘Wind Gap ‘ல் நடந்துள்ள சில துர்ச்சம்பவங்கள் குறித்து தன் பத்திரிக்கைக்காக எழுத வரும் ‘Sharp Objects’ நாவலின் நாயகி, ‘இந்நகர மக்கள் குற்றவாளி வெளியாளாக இல்லாமல், தங்களுள் ஒருவனாக இருந்தால் மகிழ்ச்சியடைவார்கள், ஏனென்றால் அப்போது ஒரு கொலைகாரனுக்கு அருகில் தாங்கள் வசித்ததையும், அவனுடன் பழகியதைக் குறித்தும் நிறைய கதைக்க முடியும் அல்லவா‘ என்று நினைக்கிறார். தங்கள் வாழ்வின் அழுத்தத்திற்கு, மாறாத தன்மைக்கு, ஏதோவொரு வடிகால் தேவைப்படும் இவர்களை, ரிச்சர்ட் ரூஸோவின் (Richard Russo) சிறுநகர மாந்தர்களிலும் பார்க்கலாம்-என்ன, அவர்கள் கொலையெல்லாம் செய்வதில்லை.
இத்தகைய முத்திரை குத்தல்கள் பல நேரங்களில் ஒரு விளம்பர உத்தியாக மட்டுமே இருக்கின்றன என்றாலும், படைப்புகளுக்குள் உள்ள நுட்பமான வித்தியாசங்களையும் (ஒற்றுமைகளையும்கூட) சுட்ட உதவுகின்றன.
ப்ளின்னின் நாயகிகள் மன அழுத்தம் உடையவர்கள் என்று பார்த்தோம். அது மட்டுமே அவர்களின் அடையாளம் அல்ல. வாசகன் எளிதில் பற்று கொள்ள முடியாதவர்களாக ப்ளின்னின் பெண் பாத்திரங்கள் உள்ளார்கள். அதற்கு அவர்களின் இருமையான எதிர்மறை குணங்கள் ஒரு முக்கிய காரணம். ‘தாய்’, ‘நாயகி’ போன்ற பிம்பங்கள் குறித்து நாம் எதிர்பார்ப்பவையை உடைத்துச் செல்பவர்கள் இந்தப் பெண்கள். நாயகி மட்டுமல்ல  “…domestic sphere is a challenging and sometimes dangerous prospect for its inhabitants.” என்ற விளக்கத்தில், குடும்பத்தில் ஆபத்தை உருவாக்கும் எதிர்மறை பாத்திரங்களும் பெண்கள்தான், அதாவது பாதிக்கப்படுபவர்களும்/ பாதிப்பை ஏற்படுத்துபவர்களும் பெண்களாகவே உள்ளார்கள். ‘Gone Girl‘ தவிர்த்து, மற்ற இரு நாவல்களில் எதிர்மறை குணாதிசயங்கள் கொண்ட ஆண்கள் வந்தாலும் இருண்மையான குணம் கொண்டவர்களாக இல்லை, ‘Gone Girl’ன் நிக்கும்கூட ஏமியுடன் ஒப்பிடும்போது அத்தனை மோசமானவனாக தெரிவதில்லை (ஒப்பீட்டளவில் என்பதை நினைவில் கொள்க).
Dark Places‘ நாவலின் நாயகி, சிறு வயதில் நடந்த சம்பவத்தால் மிகவும் பாதிக்கப்படுகிறார். மிகவும் சோகமான விஷயம்தான், ஆனால் அதே நேரம் அந்த துயரத்தை உபயோகித்து, தன்பால் பரிவு கொண்டவர்கள் தரும் நன்கொடைகளை வைத்தே 30 வயதுவரை எந்த வேலைக்கும் செல்லாமல் காலத்தை ஓட்டுகிறார். தன் கடந்தகாலத்தைப் பற்றி எப்படி பேசினால் மற்றவர்களின் மனதை இளக்கி பணம் கறக்க முடியும் என்பதில் வித்தகராக இருக்கிறார். தன் குடும்பத்தினர் எழுதிய கடிதங்களை/ புத்தகங்களை விற்றால் பணம் கிடைக்கும் என்றால் அதற்கும் அவர் தயாராகவே இருக்கிறார். ஒருவிதத்தில் தந்திரக்காரராக அவர் தோன்றினாலும், அவரின் செயல்கள் பரிதாபகரமாகவும் உள்ளன.

ப்ளின் இப்படி தனித்தன்மையுடன் பெண் பாத்திரங்களைப் படைத்திருந்தாலும், அதனாலேயே  பெண் வெறுப்பாளர் (misogynist) என்றும் விமர்சிக்கப்படுகிறார் . அதற்கு அவர்,
“To me, that puts a very, very small window on what feminism is,” she responds. “Is it really only girl power, and you-go-girl, and empower yourself, and be the best you can be? For me, it’s also the ability to have women who are bad characters … the one thing that really frustrates me is this idea that women are innately good, innately nurturing. In literature, they can be dismissably bad – trampy, vampy, bitchy types – but there’s still a big pushback against the idea that women can be just pragmatically evil, bad and selfish … I don’t write psycho bitches. The psycho bitch is just crazy – she has no motive, and so she’s a dismissible person because of her psycho-bitchiness.”
என்று பதிலளித்துள்ளார்.
ஆம், இந்தப் பெண்கள் ரத்த வெறியோடு கத்தியை எடுத்துக்கொண்டு அலைபவர்கள் இல்லை. ‘அதீத தாய்மை’ ஏற்படுத்தும் (திட்டமிட்ட/ திட்டமிடப்படாத) எதிர்மறை பாதிப்பைப் பற்றியதாக இவரின் இரண்டு நாவல்களைச் சுட்ட முடியும். ‘Gone Girl‘ நாவலின் ‘ஏமியின்’ (Amy) செயல்களை நியாயப்படுத்தும் ஒரு விஷயமும் நாவலில் கிடையாது என்றாலும்
“….Men always say that as the defining compliment, don’t they? She’s a cool girl. Being the Cool Girl means I am a hot, brilliant, funny woman who adores football, poker, dirty jokes, and burping, who plays video games, drinks cheap beer, loves threesomes and anal sex, and jams hot dogs and hamburgers into her mouth like she’s hosting the world’s biggest culinary gang bang while somehow maintaining a size 2, because Cool Girls are above all hot. Hot and understanding. Cool Girls never get angry; they only smile in a chagrined, loving manner and let their men do whatever they want. Go ahead, shit on me, I don’t mind, I’m the Cool Girl.
“….Men actually think this girl exists. Maybe they’re fooled because so many women are willing to pretend to be this girl. For a long time Cool Girl offended me………..”
“…but believe me, he wants Cool Girl, who is basically the girl who likes every fucking thing he likes and doesn’t ever complain. (How do you know you’re not Cool Girl? Because he says things like: “I like strong women.” If he says that to you, he will at some point fuck someone else. Because “I like strong women” is code for “I hate strong women’.
என்ற ஏமியின் புகழ்பெற்ற பேச்சை (monologue) , பெண்ணியமாகக் கருத முடியும் அல்லவா?

ஒரு குற்றம், அதைப் பற்றிய விசாரணை, அத்துடன் இணையாத, ஆனால் நாவலின் போக்கில் உருவாகும் முக்கியமான பாத்திரத்தின் தனி மனித குணநலன்கள்/ குடும்ப வாழ்வு பற்றிய சித்திரம் என்ற வரிசையில் எதுவும் இந்த நாவல்களில் இல்லை. ஒன்று குற்றம் பற்றிய தகவல்கள் தெரிய வர வர நாயகியின் உருவச் சிக்கல்களின் மேல் வெளிச்சம் விழ ஆரம்பிக்கும், அல்லது நாயகியின் உறவுச் சிக்கல்கள் பற்றி பிடிபட ஆரம்பிக்க, நடந்த குற்றம் பற்றிய உண்மைகள் துலங்க ஆரம்பிக்கும் என்று குற்ற விசாரணைக்கும்/ குடும்ப வாழ்விற்குமான எல்லைகள் கலந்து, எது எங்கு ஆரம்பித்து எங்கு முடிகிறது என்று சொல்ல முடியாதபடி உள்ளன இந்த நாவல்கள்.
Sharp Objects‘ நாவலில், பெரும்பகுதிவரை பரபரப்பாக எதுவும் நடப்பதில்லை. நாயகி தான் எழுத வந்த குற்றங்களைப் பற்றி விசாரணை செய்வதைவிட, தன் குடும்ப உறவுகளைச்\ சீர்தூக்கிப் பார்ப்பதிலேயே நேரம் செலவழிக்கிறார். ஆனால் அதே நேரம், அவருடைய கடந்த காலத்தில் நடந்த சில சம்பவங்கள் குறித்து தெரியவரும்போது நமக்கு ஏன் அமைதியின்மை ஏற்படுகிறது. கடந்த காலத்திலும் சரி, நிகழ்காலத்திலும் சரி, சில பாத்திரங்கள் ஏன் அடிக்கடி திடீர் திடீரென்று நோயுறுகிறார்கள், பின்பு எந்த ஆபத்தும் இல்லாமல் ஒவ்வொரு முறையும் தப்புகிறார்கள். இதற்கும் நாவலின் மையத்திற்கும் என்ன சம்பந்தம் போன்ற கேள்விகளுக்கான விடைகளை இறுதியில் ப்ளின் தருகிறார்.
Dark Places‘ நாவலில், குற்றப் புனைவின் தாக்கத்தை/ நிஜ குற்றங்கள் மீதான அதீத ஆர்வத்தைப் பகடி செய்வது போல், வருடந்தோறும் நடக்கும் “Kill Convention’ என்ற மாநாட்டை நாவலின் ஆரம்பப்புள்ளியாக வைத்துள்ளார். நிஜ குற்றங்கள் மீது பெரும் மோகம் கொண்டுள்ளவர்கள் நடத்தும் இம்மாநாட்டில், துலக்கப்படாத குற்றங்கள் அக்கு வேறு/ ஆணி வேறாக, தொழில்முறையாக இல்லாதவர்களால் பிய்த்துப் போடப்படுகின்றன. குற்றச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களிடம் உள்ள கடிதங்கள்/ பொருட்கள் நினைவுச் சின்னங்களாக கருதப்பட்டு வாங்கப்படுகின்றன. நாவலின் நாயகிக்கும் பணம் கொடுத்து, தன் வாழ்வில் நடந்த துர்ச்சம்பவம் குறித்த விசாரணை செய்யத் தூண்டுகிறார்கள்.
நாவலின் கட்டமைப்பைப் பற்றி குறிப்பிட வேண்டும். நாயகியின் நிகழ்காலம் பற்றி அவரே கதை சொல்லியாகக் கூற, அத்தகைய அத்தியாயங்களோடு, அந்த துர்ச்சம்பவம் நடந்த அன்று நிகழ்ந்தவை குறித்த விவரணைகள், நாயகியின் சகோதரன்/ தாய் இவர்களின் பார்வையில் கடந்த காலத்தைப் பற்றிய அத்தியாயங்களாக ஒன்றுடன் ஒன்று கலந்து வருகின்றன. நாயகி துர்ச்சம்பவம் நடந்த நாளைப் பற்றிய உண்மையை நோக்கிப் போக, அதே நேரம் அன்று என்னதான் நடந்தது எனபதை அவருக்கு சற்று முன்பே வாசகன் தெரிந்து கொள்கிறான் என்பதோடு, உடைந்து கிடைக்கும் கண்ணிகளை அவருக்கு முன்பே ஒட்டவைத்து அவர் ஆபத்தை நோக்கிப் பயணிக்கிறார் என்று உணர்ந்து பதைக்கிறான். இது சுவாரஸ்யமான உத்தியாக இருந்தாலும், ஒரு குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. நாயகி நிகழ்காலத்தின் கதைசொல்லி சரி, ஆனால் கடந்த சம்பவங்கள் அவரின் சகோதரன்/ தாய் இவர்கள் கதைசொல்லியாக இருந்து விவரிக்கப்படுகிறது எனும்போது அதை இப்போது, இந்த நாவலில் சொல்வது யார்? நாவலுக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கிய விதத்தில் உள்ள சிக்கல் இது. பதின்வயதின் peer-pressure, சில தவறான புரிதல்கள், சில தொடர்பற்ற நிகழ்வுகள் ஒரே நேரத்தில் நடக்கும்போது ஏற்படும் எதிர்பார்த்திராத விளைவுகள் என ஒரு துன்பவியல் நாடகத்தை ஒத்திருக்கிறது இந்த நாவல்.
2012ஆம் ஆண்டு வெளிவந்த ‘Gone Girl‘ நாவல், ப்ளின்னுக்கு மிகுந்த புகழையும்/ பாராட்டுக்களையும் பெற்றுத் தந்தது. தங்களின் ஐந்தாவது மணநாளன்று தன் மனைவி காணாமல் போனதைப் பற்றி நிக் (Nick) விவரிப்பதாக ஆரம்பிக்கும் இந்த நாவல், உண்மையான உணர்வுகள் மேல் போடப்படும் திரை, முற்றிலும் பொய்யும் இல்லாமல் முற்றிலும் உண்மையும் இல்லாமல் தரப்படும் தகவல்கள் என நம்பத்தகாத கதைசொல்லிகளால் வாசகனுடன் விளையாடுகிறது.
வெளிப்பார்வைக்கு சந்தோஷமான வாழ்வைக் கொண்டிருந்த இவர்களுக்குள் என்ன பிரச்சனை? “வெளிப்பார்வைக்கு” என்ற வார்த்தை இங்கு முக்கியமோ? “Nothing is what as it seems” என்பதற்கு மிகப் பொருத்தமாக ஒருவரையொருவர் தோற்கடிக்க நினைப்பவர்களாக நிக் மற்றும் ஏமி நம்முன் உருவெடுக்கிரார்கள்.
நாவலின் முதல் பகுதி முடியும்போது நமக்குத் தெரியவரும் விஷயம், நாவலின் போக்கைப் புரிந்து கொண்டு விட்டோம் என வாசகனை ஆசுவாசப்பட வைக்கும் அதே நேரத்தில் இன்னும் சில திருப்பங்களை ப்ளின் ஏற்படுத்துகிறார். பொம்மலாட்டம் நடத்துபவன் பொம்மையாக மாறுவதும், பொம்மை அவனை ஆட்டுவிப்பதும், மீண்டும் இந்த வேடங்கள் இடம் மாறுவதும் என மனித மனம் செய்யக் கூடிய ‘manipulation’ன் அடி ஆழத்திற்கு ப்ளின் செல்கிறார். (Jonathan Franzenன் “The Corrections” நாவலின் பாத்திரங்கள் இன்னும் கீழே இறங்கி இருந்தால், நிக்/ ஏமி போலத்தான் நடந்து கொண்டிருப்பார்கள்.அந்த விதத்தில் இந்த நாவலை ‘Dysfunctional family noir’ என்றும் சொல்லலாம்.)
நிஜக் குற்றங்கள் மேல் உள்ள ஆர்வம் ‘Dark Places’ல் பகடி செய்யப்பட்டால், இதில் பரபரப்புக்காக, செய்திகளை முந்தித் தரவேண்டும் என்பதற்காக ஊடகங்கள் செய்யும் பொறுப்பற்ற செயல்களை, ஊடக விசாரணை (trial by media), அவர்களே எழுதும் தீர்ப்பு என்று வெகுஜன கருத்துக்களை அவர்கள் பாதிக்கும் விதத்தை முகத்திலறைவது போல் சொல்கிறார்.  ஆனால் நாவலின் மிக முக்கிய அம்சம் இவை எதுவும் இல்லை.  முக்கிய பாத்திரங்களில் கொஞ்சமேனும் நன்மையை அல்லது அவர்களின் செய்கைகளுக்கான நியாயத்தை எதிர்பார்க்கும் வாசகர்கள் இந்தப் பாத்திரங்கள் மேல் எரிச்சல் அடையலாம், நாவலை வெறுக்குமளவுக்கு எந்த நல்லியல்பும் இல்லாத இருவரை நாயகன்/ நாயகியாக்கிய ப்ளின்னின் துணிச்சல் அசாத்தியமானது, அதுவே நாவலின் USPம் கூட. இந்த பலமே நாவலின் ஒரு கட்டத்தில் பலவீனமாகவும் உள்ளது என்பது ஒரு நகைமுரண்தான்.
ஏமி/ நிக் இருவருக்கான கடந்த காலம் என்பது கிட்டத்தட்ட கொஞ்சம்கூட விவரிக்கப்படாமல் உள்ளது, இருவரின் செயல்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும்போது வாசகன் ஒரு த்ரில்லை அடைகிறான், இப்படிகூட மனித மனம் இயங்குமா என்று வியக்கிறான், இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பாத்திரங்கள் மேல் ஒரு பயம் வருகிறதா என்றால் இல்லை. உதாரணமாக அவரின் மற்ற இரு நாவல்களின் வரும் எதிர்-பாத்திரங்கள் ஏமி /நிக் அளவிற்கு குரூர புத்தியுடையவர்களோ, புத்திசாலிகளோ இல்லை என்றாலும், அவர்களின் செயல்கள் இது நமக்கும் நடக்கக்கூடும் என்று உணரச் செய்வதால் நம்மை அவை சில்லிட வைக்கின்றன. ‘Gone Girl’ நாவலின் சம்பவங்கள் எங்கோ தூரத்தில் நடக்கக்கூடியதாகவே தோன்றுவதால், அந்த நேர பரவசத்திற்கு மேல், அச்சப்பட வைப்பதில்லை. இதை ‘ஆர்தர் கேனன் டோயலின்’ ‘Moriarty’ பாத்திரத்துடன் ஒப்பிடலாம். அவர் குறித்து நமக்குத் தெரியவரும் மிகச் சில தகவல்களிலிருந்து, அவர் மிக மோசமான குற்றங்களைச் செய்தவர் என்று அறிகிறோம். ஹோம்ஸுடன் மோதி அவரை வீழ்த்தக்கூடியவர் என்ற அளவில் அவர் நம்மைப் பரவசப்படுத்தினாலும், அச்சுறுத்துவதில்லை, ஏனென்றால் அவர் குறித்த அதிக தகவல்கள் நம்மிடம் இல்லை. ‘Gone Girl‘ நாவல் அதன் முடிவைச் சார்ந்து ஒரு ‘sequel’க்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டிருப்பதோடு, நாவலில் சொல்லப்படாத விஷயங்களில் ஒரு prequelக்கான உள்ளடக்கம் இருக்கிறது. (Anthony Horowitz போன்றோர் ‘Moriarty’ பாத்திரத்தை விரிவாக ஆக்கும் pastiche நாவல்கள் வெளிவந்துள்ளன)
நாவலின் இறுதி (3rd act) என்பது ப்ளின்னின் அனைத்து நாவல்களின் பலவீனமான பகுதியாக உள்ளது. ‘Dark Places‘ல் இறுதியில், இரட்டை திருப்பமாக அவர் செய்வதில் ஒன்று அபத்தமான ஒன்றாக உள்ளது. (நிஜ வாழ்வில் எந்த அளவுக்கு தர்க்கம் செல்லுபடியாகிறது, அதில் அபத்தமே இல்லையா என்றும் இங்கு வாதாட முடியும்). ‘Gone Girl‘ நாவலில் இறுதிக்கு சற்று முன்பு ஒரு பாத்திரத்தின் ‘மூவ்’ அசர வைக்கக்கூடியது, அதற்கான துப்புக்களை ப்ளின் நாவலில் முற்பகுதிகளில் வைத்துள்ளார் என்றாலும் அந்தப் பாத்திரத்தின் ‘consistency’ஐ அது உடைக்கிறது. இதை தர்க்கரீதியான பிரச்சினை என்று சொல்வதற்கு பதில், இறுதியில் இன்னும் இன்னும் வாசகனை அசரடிக்க வேண்டும் என்ற ப்ளின்னின் அணுகுமுறையின் பலவீனம் எனலாம். அசந்து விடுகிறோம் என்பது உண்மைதான் என்றாலும் அதற்கு ப்ளின்/ நாம் கொடுக்கும் விலை தேவைதானா? “Less is more” என்று ப்ளின் சில நேரங்களில் எழுதினால், இறுதி பரபரப்பு சற்று குறைந்தாலும், நாவலின் முழுமையை பாதிக்காமல் இருக்கும்.
Gone Girl‘ நாவலின் வெற்றி என்பது மிக அதிக விற்பனை, விருதுகள், திரைப்படமாக்கம், அதன் வெற்றி என்பதையெல்லாம் தாண்டி குற்றப் புனைவுகளில் ‘Cultural Touchstone’ஆக மாறியதுதான். ‘Domestic Noir’ (நாவல் வெளிவந்த காலத்தில் இந்தப் பதம் புழக்கத்தில் இல்லையென்றாலும்) என்ற  உப-வகைமையின் பெரும் எழுச்சிக்கு இந்த நாவலின் வெற்றி வித்திட்டது. அந்த விதத்தில் இதை ‘The Da Vinci Code‘ உருவாக்கிய அலையுடன் ஒப்பிட முடியும்.
The Da Vinci Code’/’Gone Girl‘ நாவல்களின் சாதக/ பாதகங்களைப் விமர்சித்து அவை பெற்ற பெரும் வெற்றிக்கு தகுதியானவை அல்ல என்று வாதிடலாம். ஆனால் அவற்றின் தாக்கம் மறுக்க முடியாத ஒன்று. ‘Gone Girl‘ நாவலைப் போலவே, உள்ளடக்கத்தில் மட்டுமின்றி, தலைப்பிலும் ‘read alikes’ வெளிவந்த வண்ணம் உள்ளன. ‘The Girl on the Train’, ‘The Girl in the Red Coat’, ‘The Book of You’, ‘Disclaimer’, ‘The Silent Wife’ சில உதாரணங்கள். இவற்றில் ‘The Girl on the Train’ இந்த வருடம் வெளிவந்து வெறும் வெற்றியைப் பெற்றிருக்கும் நாவல்.
Javier Sierra -ஸ்பானிய மொழியில் – எழுதிய ‘The Secret Supper‘ம், ‘The Da Vinci Code’ம் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் எழுதப்பட்டு, ‘The Da Vinci Code’ வெளிவந்த பின் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது போல, சில நாவல்கள் ‘Gone Girl’கு முன்பே எழுத ஆரம்பிக்கப்பட்டு/யோசிக்கப்பட்டு இப்போது தான் வெளி வந்திருக்கலாம் அல்லது முன்பே வெளி வந்து இந்த நாவலின் வெற்றியினால் இப்போது தான் கவனம் பெற்றிருக்கலாம்.
தினமும் காலையில் எழும் போது, தன் கடந்த காலம் குறித்த எந்த நினைவும் இல்லாத, அன்று தெரிந்து கொண்ட விஷயங்ககளை அடுத்த நாள் மீண்டும் ‘மறக்கும்’ பெண் பாத்திரத்தை மையமாக வைத்து புனையப்பட்ட, 2011ல் வெளிவந்த S.J Watsonன் ‘Before I go to Sleep‘ என்ற நாவல் இந்த வகைமையில் குறிப்பிடத்தக்க ஒன்று . Sophie Hannahவின் குற்றப்புனைவுகளில் இந்த வகைமையின் கூறுகளைக் காண முடிகிறது. எல்லா அலையைப் போலவே இதிலும் நல்ல, சுமாரான, மோசமான படைப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ‘The Da Vinci Code‘ பாணி நாவல்களின் பொற்காலம் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தது போல் இதற்கும் நடக்கும். ஆனால் இந்த அலை இப்போதைக்கு ஓய்வதாகத் தெரியவில்லை.

No comments:

Post a Comment