Monday, January 25, 2016

ஆதூரம் தேடும் உள்ளங்கள் – பாவண்ணனின் சில கதைகள்

பதாகை இதழில் வெளிவந்தது -http://padhaakai.com/2016/01/17/paavannans-stories-consoling-hearts/
----------
வலை‘ சிறுகதை தொகுப்பில் உள்ள ‘காலம்‘ கதையில் குழந்தை மீனுவை வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று அதட்டும் கதைசொல்லி,   அவள் முகத்தில் சோகம் கவிவதைப் பார்க்கிறார். 10-15 நிமிடங்கள் கழிந்தபின் பார்த்தால் சோகம் எதுவும் இன்றி பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறாள். 
தீ‘ கதையில்,  – உணர்வுகளைப் புரிந்து கொள்ளாதகொள்ள விரும்பாத அலுவலக மேலதிகாரிகளின் போக்கினால்மணமான மூன்று ஆண்டுகளில்  30 நாட்களுக்கும் குறைவாகவே மனைவியுடன் நேரம் செலவிட்டிருக்கும் கதைசொல்லி கொதி நிலையில்  உயரதிகாரியை அடித்து விடுகிறார்.
தன் சோகத்தை சில நிமிடங்களில் மறந்து தனக்கென்று ஒரு உலகை உருவாக்கிக்கொள்ளும் மீனுவின் குழந்தைமை என்ற  புள்ளியில் இருந்துஅந்தக் குழந்தைமையைத் தொலைத்துவிட்டு,   ‘முதிர்ந்தவர்கள்‘ என்ற அடையாளம் பெற்றாலும் தன்னிலை இழத்தல் என்ற புள்ளியை அடையும் வரையிலான  காலத்தினூடான பயண அனுபவத்தை  இந்தத் தொகுப்பில் உள்ள – சிறார்கள்முதிரா இளைஞர்கள்ஆண்கள்  பாத்திரங்கள் வாயிலாக நாமும் அடைகிறோம்.  
கீழ் மத்திய தரஏழை என்ற பொருளாதார அடுக்கில் உள்ளவர்கள் இந்தக் கதைகளின்  பாத்திரங்கள்பல ஆண்டுகளாக அதே ஊரில் நடைபாதையில் துணி விற்கும் ராமசாமியின் மகன் (முத்து‘ சிறுகதை) முத்து தந்தையின் பாணியிலிருந்து விலகிவேறு இடத்தில்வேறு விதமாக  வியாபாரம் செய்ய முயல்கிறான்ராமசாமி அதை முதலில் எதிர்த்தாலும் (மகனை அதற்காக அடிக்கவும் செய்கிறான்),  முத்து தான் கற்பனை செய்திராத அளவிற்கு விற்பனை செய்ததை அறிந்து நெகிழ்ந்துதனக்கு உணவளிக்க வரும் மனைவியிடம் புள்ள சாப்டாம எனக்கெதுக்கடி சாப்பாடு?… சம்பாரிச்ச புள்ளக்கிபோடாம கொஞ்ச வந்துட்ட எங்கிட்ட என்று (செல்லக்)  கோபம் கொஞ்சும் இடத்தில் தகப்பனின் பெருமிதத்தையும்குடும்ப அதிகார அடுக்கில் ஏற்பட்டுள்ள நுட்பமான இடமாற்றத்தையும் உணரலாம்.  முரடனாக முதலில் தோற்றமளிக்கும் ராமசாமி தன் மகன் தன்னைத் தாண்டிச் செல்வதைக் எதிர்கொள்ளும் விதத்தையும் , ‘தக்கையின் மீது நான்கு கண்கள்‘ கதையில் பேரன் தன்னை முந்தி விடுவானோ என்று – மனம் கனிந்திருக்கும் வயதில்– பேரனின் வெற்றி  தன் சுயத்தை இழக்கச் செய்வதாக உணர்ந்து பதற்றமடையும்  மாணிக்கம் தாத்தாவோடு ஒப்பிட்டு  அவற்றின் இடையே உள்ள வித்தியாசத்திற்கான  காரணங்கள் என்னவாக இருக்கும் என்றும் ஆராயலாம்.
மூவாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்து மகனை பள்ளியில் சேர்த்து பெருமிதம் கொள்ளும் கதைசொல்லி (மையம்‘ ) பள்ளிப் பருவத்தில் நன்றாகப் படித்தவர்மாவட்ட ஆட்சியர் ஆகும் கனவுகள் கொண்டவர்.  அவர் வகுப்பில்தினமும் வில்வண்டியில் வந்துநடந்து செல்லும் சிறுவர்சிறுமிகளைப் பார்த்து கையசைத்துச் செல்லும்,  
 மாலினியும்  படிக்கிறாள்புத்திசாலி ஏழை மாணவன்பணக்காரப் பெண் என்றவுடன்நட்புகாதல் உருவாவது  என்பதெல்லாம் பாவண்ணனின் உலகில் நடப்பது இல்லைஅத்தகைய வழமையான ஆசுவாசங்களை அவர் வாசகனுக்கு அளிப்பதில்லைஉண்மையில்ஒரு சம்பவம் மூலம் கதைசொல்லிக்கு அவள் மீது வெறுப்பே ஏற்படுகிறதுமாலினியின் குறும்பு இதற்கு அடிததளமிட்டாலும்அவர்களுக்கிடையே உள்ள சமூகபொருளாதார இடைவெளியும்அதற்கேற்றப்படி ஆசிரியர் அந்தச் சம்பவத்தில் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதுமே (பெரும் பணக்காரரின்கிராமத்தில் செல்வாக்கானவரின் பெண்என ஆசிரியருக்கும் அதற்கான காரணங்கள் யதார்த்தத்தில் உள்ளன) முக்கிய காரணமாகின்றன.  அவர் அவ்வாறு நடந்து கொள்ளாமல் இருந்திருந்தால்இருவரும் ஓரிரு நாட்களில் நடந்ததை மறந்திருப்பார்கள்துளிர் விடுவதற்கு முன்பே ஒரு நட்பு , மாலினியின் 
வண்டிப் பயணத்தில் அவள் கையசைப்புக்கள் பொருட்படுத்தாதபூக்களாய்..” உதிர்ந்திருக்காது.
இந்தப்  பகை  விலகாமல்உச்சகட்டமாகபள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று சான்றிதழ் வாங்கச் செல்லும்போதுஅங்கு வரும் மாலினியின் தந்தை பேசும் பொறாமை ததும்பும் சொற்கள் அவர் மனதில் நீங்கா  வடுவாக  தங்கி விடுகின்றன.   
மேலே படிக்க வைக்க முடியாத குடும்பச் சூழலில்கதைசொல்லியின் ஆட்சியர் கனவுகள் கலைகின்றனபெரிய போராட்டத்திற்குப் பின்சிறிய வேலை கிடைத்து தங்கைக்குத் திருமணம்பிறகு தன்னுடைய திருமணம் /குழந்தை என ஒருவாறு வாழ்வில் தன்னைப் பொருத்திக் கொள்கிறார்பெரிய பள்ளியில் சேர்த்த பெருமை நீடித்ததா என்றால்அதுவும் இல்லைமகனை பள்ளியிலிருந்து அழைத்து வரும்போது காரில் செல்லும் சக மாணவி மைதிலியை நோக்கி மகன் கையசைப்பதைப் பார்த்தவுடன் , மாலினியின் நினைவு வந்து மனதைக் கீற  கதை முடிகிறது.
முதற் பார்வையில் இது நெகிழ்ச்சியைத் தூண்ட  வலிந்து திணிக்கப்பட்ட முடிவாகத் தெரியலாம்ஆனால் யதார்த்தம் இது தான். பல ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பின் கதைசொல்லி தன் வாழ்க்கைச் சூழலில் முன்னேற்றம் அடைந்தாலும்மாலினிமைதிலி வசிக்கும் சூழலின் – வில்வண்டியில்காரில் வரும் – மையத்தின் விளிம்பில் தான் இருக்கிறார்சக மாணவியைப் பார்த்து  இப்போது உற்சாகமாக கையசைக்கும் கதைசொல்லியின்   மகனும்தந்தையைப் போலவே ஒரு நாள் இருவருக்குமிடையே உள்ள கடக்க முடியாத இடைவெளியை  உணரலாம்உணரலாமலும் போகலாம்கதைசொல்லியின் பேரன் தலைமுறையில் அவர்களும் மையத்திற்கு வரக்கூடும் என்ற நம்பிக்கை எழுந்தாலும்அன்றும் அவரின் வலி முற்றிலும் நீங்காது என்ற உணர்வும் நெருடிக்கொண்டே இருக்கிறது.
பால்யத்தின் நட்பை ‘பட்டம்‘/’சிலுவை‘ கதைகளில் பார்க்கிறோம். ‘பட்டம்’ கதையில் பள்ளியில் பலரால் கேலிக்குள்ளாக்கப்படும் கதைசொல்லியின் ரட்சகனாக வரும் தியாகராஜன் கதைசொல்லியை ஊக்கப்படுத்திதன்னம்பிக்கை கொள்ள வைக்கிறான்.  சராசரி மதிப்பெண் பெற்றே ஒவ்வொரு வகுப்பாகத் தாண்டிச் செல்லும்கேலி செய்யப்படும் நேரம் தவிர்த்து பிற சமயங்களில் பிறர் கண்களுக்குத் தென்படாதவனாக உலவும்   கதைசொல்லிக்கும்விளையாட்டில் தன்னையே கரைத்துக் கொள்ளும்அனைவரின் கவனத்தையும் இயல்பாக தன்பக்கம் ஈர்க்கும்  தியாகராஜனுக்கும் நட்பு உண்டாக பெரிய முகாந்திரம் ஒன்றும் இல்லை.  சரி/தவறு என்று பார்க்காததாங்கள் செய்யும் செயல்களின் விளைவுகளைப் பொருட்படுத்தாத பால்யத்தின் நட்பிற்கு அது தேவையும் இல்லைஎனவேதான்தேர்வில் தியாகராஜனுக்கு உதவ முயன்று சிக்கிபிரம்பு முறியுமளவிற்கு கதைசொல்லி அடி வாங்கினாலும்தியாகராஜன் தானே இதற்கு காரணம் என்று கதைசொல்லிக்கு கோபம் வருவதில்லை மாறாக  தன்னால் தான் இருவரும் மாட்டிக்கொண்டோம்  என்று வருந்துகிறான்.  அவர்கள் நட்பில் எந்த விரிசலும் ஏற்படாமல்தேர்வில் கதைசொல்லிதியாகராஜனுக்கு உதவுவதில் வெற்றி பெற்றால்  
பரீட்சை முடிந்தபின் தியாகராஜன் செலவில் திரைப்படம் பார்ப்பதுமற்றும்  உணவு விடுதியில் ‘பிரியாணி‘ உண்பது என்ற தங்களின் முந்தைய முடிவைஇருவரும் மாட்டிக்கொண்டு அடிவாங்கினாலும் மீண்டும் உறுதிப் படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் இந்த நட்பு தொடராமல்தியாகராஜன் தற்கொலை செய்துகொள்கிறான். விளையாட்டு மைதானத்தில் கம்பீரமாக வலம் வந்த தியாகராஜனுக்கு தற்கொலை புரிய  தேர்வில் தோற்றுவிடுவோம் என்ற பயம் மட்டுமே காரணமாக இருக்குமா அல்லது ஆப்த நண்பனிடம் கூட சொல்ல முடியாத என்ன சிக்கல் இருந்திருக்கும்?
சிலுவை‘ கதையில்சிலுவையின் தொடர்  காதல் தோல்விகள் பற்றிய விவரணைகள் மெல்லிய நகைச்சுவையோடு இருந்தாலும்நிலையற்ற அலைகழிப்பாக உள்ள அவன் வாழ்வில் மாறாத அம்சம் கதைசொல்லிக்கும் அவனுக்கும் உள்ள நட்பு தான்.  நல்ல  உத்தியோகம் என்ற புருஷ லட்சணம்  இல்லாததால் இரண்டு வருடங்களுக்குப்  பிறகு மனைவியைத் தயங்கித் தயங்கி  நெருங்கி அவமானப்படுத்தப்பட்டுதற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிலுவையை இரவில் பார்த்துக்கொள்ள அனைவரும் தயங்கும் நிலையில் கதைசொல்லி மட்டுமே  முன்வருகிறார்இயலாமையின் குற்றவுணர்வை சொல்லும் ‘கரையும் உருவங்கள்‘ கதையில் … அக்கா ஒக்காந்து பத்து வருஷம் ஆச்சு.ஏதாவது ஒன்னு கொறச்சிருக்கேனா?. ஆனாலும் நீ ரோஷக்காரண்டா என்று பாசத்தோடு அக்கா சொல்லும்போது உடன் உடைந்து விடும் சங்கரன் மட்டுமல்லமனைவியின் வெறுப்பின் சூடு பட்டுஅவள் தரப்பிலும் நியாயம் இருப்பதை உணர்ந்ததால் அவள் மீது கோபம் கொள்ளாமல்,   காறித் துப்பற மாதிரிகட்டன பொண்டாட்டியே பேசிட்டப்றம்  நா எதுக்கு வாழனும் சொல்லுடா.” என்று கேவும் சிலுவையின் அகம் கூட இயலாமையின் குற்ற உணர்வில் கரைந்து கொண்டே தான் இருக்கிறது. 
தன்னையோ , தன் நண்பனையோ இந்தக் கதைகளில் வாசகன் காணக்கூடுமென்றாலும் சுய அனுபவத்துடன் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும் கதைகளாக மட்டும் இவற்றை குறுக்கிக் கொள்ள முடியாது.  இந்த நிகழ்வுகள் எதையும் வாசகன் எதிர்கொள்ளவில்லை என்றாலும்இவற்றினூடாக தொக்கி இருக்கும் , ஒரு கட்டத்தில் வாழ்வை   எதிர்கொள்வதில் உருவாகும் இயலாமையின் கணங்களை  அனைவரும் எப்போதேனும் எதிர்கொண்டிருப்போம். 
அந்த வகையில் கதைகளை ஒவ்வொன்றாக உள்வாங்குவதுஅவற்றின் நிகழ்வுகளை/பாத்திரங்களை விமர்சிப்பது இவற்றையெல்லாம் தாண்டி அனைவரும் தொடர்பு படுத்திக்கொள்ளக்கூடிய அம்சத்தை இவை கொண்டிருக்கின்றன. ஒரு பொதுப் பார்வையாய்இந்தக் கதைகளில் பெரும்பாலானவற்றில்   வாழ்வின் போக்கில் இந்தப் பாத்திரங்கள் – அவரவர் சூழல் உருவாக்கும் தடைகளின்தொடக்கூடிய எல்லைகளின்,  தோல்விகளின் துயர் – குறித்து ஏற்படுத்திக்கொள்ளும் புரிந்துணர்வும்சகிப்புத்தன்மையும்அந்நேரத்தில் கிடைக்கும் அரவணைப்பு உண்டாக்கும் மன நெகிழ்வும் வெளிப்படுகின்றன என்று சொல்லலாம்.
வாசகனை  நெகிழச் செய்யும் விதமாக  திணிக்கப்பட்டவை ( emotional manipulation) என  எதுவும்   இக்கதைகளில் இல்லை.   வாசகனைப் போலவே ஒரு பார்வையாளனாக  இந்தப் பாத்திரங்களோடு பயணிக்கும்  பாவண்ணன் , ஒரு கட்டத்தில் 
முத்து பெரிய வியாபாரியாக உயர்வான்கதைசொல்லியின் மகன் ‘மையத்தை‘ அடைவான்  அல்லது சிலுவையின் வாழ்வு முழுதும் இனி துயரம் தான்– போன்றெல்லாம் பாத்திரங்களின் வாழ்வின் அடுத்த கட்ட  பாதையைக்  காட்டாமல்   ‘முடிவு‘ என்று பொதுவாக  வரையறுக்கப்பட்ட சூழ்நிலைகளில் கதைகள் முடிக்காமல்பாத்திரங்களுடனான தன்னுடைய  (வாசகனுடைய) பயணத்தை நிறுத்தி விடுகிறார்ஆனால் அப்படிச் செய்வது சடுதியில் முடிந்த உணர்வைத் தராமல்முடிந்து போன ஒரு சிறிய பயணத்தின்  நினைவுகளை அசைபோடச் செய்வதைப் போல்எந்த வலியுறுத்தல்களும் இல்லாமலேயே வாசகனின் உணர்வுகளை தன்னியல்பாகத் திரண்டெழச் செய்கின்றன.  தொடர் மன வாதையில் இந்தப் பாத்திரங்கள்  
இருந்தாலும்முற்றிலும் தோல்வியைஅவநம்பிக்கையை வலியுறுத்தும் கதைகள் அல்ல இவைகடற்கரையில் பொங்கி அழும் சிலுவையை பேச விட்டுவிழுந்து கொண்டிருக்கும் சூரியனைப் பார்த்தபடி மௌனமாக சிகரெட் பற்றவைக்கும் நண்பனும் , மைதிலியைப் பார்த்து கையசைக்கும் மகனை ஆதூரத்துடன் அணைத்துக்கொள்ளும் தந்தையும்நம் பாரங்களைச் சுமக்க உதவும் இன்னொரு தோள் கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறார்கள். 

2 comments:

  1. இந்த மாதிரியான ரசனைகளில் தான் கதைகள் புனர்ஜென்பம் எடுகின்றன போலும் என்று தோன்றுகிறது.

    உங்கள் ஆத்மார்த்தமான பகிர்தலை வெகுவாக ரசித்தேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸார். சென்ற பதாகை இதழில் பாவண்ணன் குறித்து இன்னும் பல கட்டுரைகளும் விரிவான பேட்டியும் உள்ளது. padhaakai.com தளத்தில் PDFவாகவும் பாவண்ணன் காலாண்டிதழை தரவிறக்கம் செய்யலாம்.

      Delete